17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்ப்பதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று (ஜூலை 28) அறிவித்துள்ளது. முன்பு 18 வயது நிரம்பியவர்கள் (ஜனவரி 1ஆம் தேதிப்படி) வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க அனுமதிக்கப்படுவர். தற்போது இந்த விதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே இன்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி, “17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்ப்பதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம். 18 வயது வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருத்தப்பட்ட விதிகளின் படி, இந்தாண்டில் ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்காலம். முன்பு ஜனவரி 1 ஆம் தேதி மட்டும் இருந்த நிலையில் தற்போது மேலும் 3 தேதிகளில் அனுமதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து மாநில தேர்தல் ஆணையர்கள், அலுவலர்கள் இளைஞர்கள் விண்ணபிக்க ஏற்றவாறு தொழில்நுட்ப வசதியை உறுதிப்படுத்த தர வேண்டும் என்றும், விண்ணப்ப படிவங்கள் எளிய முறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விண்ணப்ப படிவங்கள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக 6பி என்ற புதிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாகவும் இந்த பணியை மேற்கொள்ளலாம். வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்படும் ஆதார் எண் ரகசியம் காக்கப்படும். எந்த ஒரு பட்டியலிலும் இடம் பெறாது. விருப்பமுள்ளவர்கள் கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/election-commission-allows-17-year-olds-to-register-in-advance-for-voters-list-enrolment-486033/