வெள்ளி, 29 ஜூலை, 2022

பர்மார் அருகே போர் விமானம் விபத்து: இரண்டு வீரர்கள் பலி

source https://news7tamil.live/both-pilots-killed-in-accident-of-mig-21-aircraft-near-barmer.html

ராஜஸ்தான் பர்மார் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்தில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.


ராஜஸ்தான் மாநிலம், பர்மார் மாவட்டம் உதர்லாய் விமான தளத்தில் இருந்து, நேற்று மாலை இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் – 21 ரக போர் விமானத்தை பயிற்சிக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இரவு 9.10 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. “அவர்கள் இருவரின் இழப்புக்கும் மிகவும் வருந்துகிறோம். இந்த நேரத்தில் அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.” என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விமானப் படை தளபதி வி.ஆர். சௌத்ரியிடம் பேசியுள்ளார். இதுகுறித்து ராஜ்நாத் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில், “ராஜஸ்தான் பர்மார் மாவட்டத்தில் ஏற்பட்ட போர் விமான விபத்தில் விமானப் படையின் இரண்டு வீரர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. நாட்டுக்காக அவர்கள் ஆற்றிய சேவை எப்போதும் மறக்கப்படாது. இந்த கடினமான நேரத்தில், அவர்கள் குடும்பத்துடன் இணைந்து துக்கத்தை பகிர்ந்து கொள்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

“கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போதுவரை சுமார் 6 மிக் 21 விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் ராணுவத்துக்குச் சொந்தமான விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகளால் சுமார் 44 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மிக் 21 ரக விமானம் கடந்த 1963ம் ஆண்டு இந்திய விமானப் படையில் பயன்பாட்டுக்கு வந்தது. ஒருகாலத்தில் விமானப் படைக்கு முதுகெலும்பாக இருந்திருக்கிறது. ஆனாலும், பழமையானாதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்க வேண்டியது.” என்று தகவல்கள் கூறப்படுகின்றன.

-ம.பவித்ரா