டெல்லி ரயில் நிலையத்தில் 30 வயதான பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக 4 ரயில்வே ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஜூலை 22ஆம் தேதி அதிகாலை 3.27 மணிக்கு ரயில்வே போலீசாருக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய அந்தப் பெண் தாம் டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், தாம் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற காவலர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர். அப்போது, பெண்ணை ரயில்வே மின்துறை ஊழியர்கள் இருவர் பாலியல் வன்புணர்வு செய்ததும், சக ஊழியர்கள் இருவர் இந்த பாலியல் வன்புணர்வுக்கு உதவி புரிந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட நால்வரையும் இரண்டு மணி நேரத்துக்குள் கைதுசெய்தனர். அப்போது அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
பாதிக்கப்பட்ட பெண் கணவரை பிரிந்து தனியாக வசித்துவருபவர் ஆவார். இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள ரயில்வே ஊழியர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பழக்கம் நாளடையில் நெருக்கமாகியுள்ளது. இருவரும், செல்போனில் தொடர்புக் கொண்டு பேசிவந்துள்ளனர். இந்த நிலையில் தமக்கு ரயில்வே துறையில் பல அதிகாரிகளை தெரியும், அவர்கள் மூலம் உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என ரயில்வே ஊழியர் பெண்ணிடம் ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஜூலை 21ஆம் தேதி கீர்த்தி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு அந்தப் பெண்ணை அழைத்து வந்துள்ளார். அப்போது, இன்று எனது மகனுக்கு பிறந்தநாள், புதுவீட்டில் குடியிருக்க போகிறோம். இதற்காக சின்ன பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்” என்றுள்ளார்.
இதை நம்பி சென்ற பெண்ணை ரயில்வே நிலையத்தின் மின்பழுதுபார்ப்பு அறையில் வைத்து சக ஊழியருடன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதே அலுவலகத்தில் பணிபுரியும் இருவர் இதற்கு உதவி புரிந்துள்ளார்.
இது குறித்து பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் 2 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைதுசெய்தனர். அவர்கள், சதீஷ் குமார் (35), வினோத் குமார் (38), மங்கள் சந்த் மீனா (33) மற்றும் ஜெக்தீஷ் சந்த் (37) ஆகியோர் ஆவார்கள்.
தொடர்ந்து, 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்கள் 4 பேருக்கும் 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதனை ரயில்வே டிசிபி ஹரேந்திர சிங் தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/crime/delhi-woman-gang-raped-inside-railway-station-483572/