கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் புதிய அதிபராக ராஜபக்ச குடும்பங்களின் நெருக்கமான நண்பரான ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார்.
இது நடந்த மறுதினமே இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்த்தனே பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ரணில் விக்கிரமசிங்கேவின் கல்லூரி நண்பரான தினேஷ் குணவர்த்தனே தீவிர இடதுசாரி சிந்தனையாளர் ஆவார். 73 வயதான தினேஷ் குணவர்த்தனேவின் குடும்பம் அரசியல் பின்னணி கொண்டது. இவரின் குடும்பத்தினர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள்.
யார் இந்த தினேஷ் குணவர்த்தனே?
இலங்கையின் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியில் அங்கம் வகிக்கும் ட்ரொட்ஸ்கிச பெரும்பான்மை தேசியவாத மகாஜன எக்சத் பெரமுனா கட்சியின் தலைவர் ஆவார்.
50 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்க்கையில் பயணிக்கும் தினேஷ் குணவர்த்தனே, இலங்கையின் வெளியுறவு அமைச்சர், கல்வி அமைச்சர் என பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
கடந்த ஏப்ரலில் ராஜபக்ச இவரை உள்துறை அமைச்சராக ஆக்கினார். ஸ்ரீலங்காவின் அரசியல் வரலாற்றில் தினேஷ் குணவர்த்தனேவின் தந்தை பிலிப் குணவர்த்தனே முக்கிய பங்காற்றியவர் ஆவார்.
இவர் லங்கா சம சமஜா என்ற கட்சியை தொடங்கி, நாடு முழுக்க சோசியலியத்தை பரப்பினார். ஆகையால் இவரை ஸ்ரீலங்கா சோசியலியத்தின் தந்தை எனவும் போரலுகோடா சிங்கம் எனவும் மக்கள் அழைத்தனர்.
பிலிப்பின் மரணத்துக்கு பின்னர் 1979ஆம் ஆண்டு கட்சியின் தலைவராக தினேஷ் குணவர்த்தனே பொறுப்பேற்றுக்கொண்டார். 1983இல் முதல் முறையாக அந்நாட்டின் நாடாளுமன்றம் சென்றார்.
மேலும் தினேஷ் குணவர்த்தனே கொழும்பில் உள்ள புகழ்பெற்ற ராயல் கல்லூரியில் பயின்றனர். அப்போது ரணில் விக்கிரமசிங்கே இவரது கல்லூரி தோழர் ஆவார். பின்னாள்களில் தினேஷ் குணவர்த்தனே நெதர்லாந்தில் உள்ள வணிகவியல் பல்கலைக்கழகத்தில் பபிஏ முடித்தார்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் தொடர்பு
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தினேஷ் குணவர்த்தனேவின் தந்தை பிலிப் பங்கெடுத்துள்ளார். இவர் லண்டனில் பயின்றபோது ஜவஹர்லால் நேரு மற்றும் கிருஷ்ணன் மேனன் ஆகியோருடன் நெருங்கிப் பழகினார்.
1942ஆம் ஆண்டு ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையேறு வெளியேறு இயக்கத்தில் பிலிப் கலந்துகொண்டார்.
இந்தப் போராட்டத்தில் பிலிப்பின் மனைவி குசூமா பின்னாட்களில் கலந்துகொண்டார். தினேஷின் அண்ணன் இண்டிகாவும் மும்பையில் பிறந்தவர் ஆவார்.
தினேஷ் குணவர்த்தனே எதிர்கொள்ளும் சவால்கள்
இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தினேஷ் குணவர்த்தனே அரசியல் ரீதியாக மிகப்பெரிய கடினமான சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளார்.
இலங்கையில் நிலவும் கடும் பணவீக்கம் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல், பொருள்கள் கடும் விலையேற்றம் என நடுத்தரம் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடும் சவால்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
இவர்களுக்கு முதலில் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதை நாடு உறுதி செய்ய வேண்டும். மேலும் நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இது அவருக்கு அரசியல் ரீதியாக நெருக்கடிகளை தொடர்ந்து கொடுக்கும்.
முன்னதாக மக்கள் தன்னெழுச்சி போராட்டம் காரணமாக, இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
கோத்தபய ராஜபக்ச மனைவியுடன் சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரும் இலங்கையில் இல்லை. மகிந்த ராஜபக்ச வெளிநாடு தப்பிச் செல்ல இலங்கை உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது
source https://tamil.indianexpress.com/explained/sri-lankas-new-prime-minister-dinesh-gunawardena-and-his-india-connect-483913/