வியாழன், 21 ஜூலை, 2022

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,116 பேருக்கு கொரோனா

 21 07 2022 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,24,258 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்பதால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,030 ஆகவே உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 2,243 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,69,526 ஆக உள்ளது. 16,702 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 285 பேரும், கோவையில், 167 பேரும், திருவள்ளூரில் 105 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூரில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக 2 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 33,243 கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 6,77,86,610 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

-ம.பவித்ரா

source https://news7tamil.live/2116-new-cases-reported-in-tamilnadu-in-last-24-hours.html