சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களுக்கு மத்திய அரசு 5 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் ஊக்கத் தொகையுடன் சேர்த்து நற்கருணை வீரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்.
அதன்படி, விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உயிரை காப்பாற்றியவர்கள் குறித்த பரிந்துரையை மாதந்தோறும் போக்குவரத்து ஆணையரகத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தங்களது அடையாளத்தை வெளிக்காட்டி கொள்ள விரும்பாதவர்களுக்கு வெகுமதி வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே விபத்தில் பல உயிர்களை ஒருவர் காப்பாற்றியிருந்தால் அவருக்கு 5 ஆயிரம் வழங்கப்படும் எனவும், ஒருவரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால் 5 ஆயிரம் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரே விபத்தில் பலரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால் அவர்கள் அனைவருக்கும் தலா 5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும், இத்திட்டம் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
source https://news7tamil.live/10000-rupees-reward-for-saving-a-person-involved-in-a-road-accident-tamil-nadu-government-notification.html