பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் 2ம் நாளாக இன்றும் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் முன்னெடுத்துள்ளார். இதன் பலனாக எதிர்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது.
இதில் பங்கேற்க பெங்களூரு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதன் பின்னர் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி எதிர்கட்சி தலைவர்களுக்கு இரவு விருந்து அளித்தார்.
பெங்களூருவில் நேற்றிரவு நடைபெற்ற விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ்குமார், ஹேமந்த் சோரன், பகவத் மான், லாலுபிரசாத், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்க உள்ளன.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் சரத் பவார் மற்றும் அக்கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சூலே ஆகியோர் பங்கேற்கின்றனர்.
18 7 23
source https://news7tamil.live/opposition-parties-hold-consultation-for-2nd-day-in-bengaluru-26-parties-including-dmk-liberation-tigers-participate.html