18 7 23
தமிழ்நாடு என்ற பெயர் அரசியலுக்காக புதிதாக கட்டமைக்கப்பட்ட பெயரல்ல, சங்க இலக்கியங்களான தொல்காப்பியத்திலும், பரிபாடலிலும், சிலப்பதிகாரத்திலும் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. அது குறித்த தொகுப்பை பார்க்கலாம்.
நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் வைத்த நாள் 1967 ஆம் ஆண்டு ஜூலை 18. அந்த வரலாற்றை பார்ப்போம். இந்தியாவின் எந்த மாநிலத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு தமிழ்நாட்டிற்கு உண்டு. தமிழ்நாடு என பெயர் வைக்க 1956 முதல் 1967 வரை மிக நீண்ட நெடிய போராட்டங்கள், தியாகங்களைக் கடந்த வரலாறு உண்டு
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்,சென்னை மாகாணம் என்கிற மெட்ராஸ் பிரெசிடென்சியின் கீழ், தென் இந்தியாவின் பெரும்பாலான நிலப்பகுதிகள் ஆட்சிப்பகுதிகளாக இருந்தன. 1953 ம் ஆண்டு அக்டோபரில் ஆந்திர மாநிலம் தனியாக பிரிந்தது. 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபோது கர்நாடகா, கேரளா என தனி மாநிலங்களானது. ஆனாலும் தமிழ்நாடு மெட்ராஸ் ஸ்டேட்’ என்றே அழைக்கப்பட்டது. இதை தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழத் தொடங்கின.
1955 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி சிலம்பு செல்வர் ம.பொ.சி.யின் தமிழரசு கழகத்தின் செயற்குழுவில், தமிழ்நாடு என பெயரிடப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு பெயருக்கான போராட்ட விதையைத் தூவியது. பிறகு 1956 பிப்ரவரி 20ஆம் தேதி தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென மாநிலம் முழுவதும் அனைத்து கட்சிகளின் சார்பில் முழு அடைப்பு போராட்டமும், வேலை நிறுத்தமும் நடைபெற்றது.
1956 மார்ச் 28ஆம் தேதி சட்டமன்றத்தில் மாநில புனரமைப்பு மசோதாவின் மீதான விவாதத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை மாநிலத்தை, தமிழ்நாடு என பெயரிடக் கோரினர். விருதுநகரில் அதே ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டி விடுதலை போராட்ட வீரர் சங்கரலிங்கனார் தொடர்ந்து 70 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து, 1956 அக்டோபர் 13ஆம் தேதி உயிர்நீத்தார். இதுவே தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான வேள்வி தீயில் உதித்த அணையா சுடராக ஒளிர்ந்தது
சட்டமன்றத்தில் சோசலிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ பி.எஸ்.சின்னதுரை, தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார். 1961ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி விவாதத்தில் பேசிய அன்றைய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம், “மெட்ராஸ் ஸ்டேட் என்று சொல்லப்படும் இடத்தில் தமிழ்நாடு என எழுதலாம்” என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
1961 ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் சென்னை மாகாணத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயரிடவேண்டும் என்று தீர்மானத்தை முன்மொழிந்தார் கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி. இந்த தீர்மானம் விவாதத்திற்கு வந்தபோது , ராமமூர்த்தி, சிறையில் இருந்ததால், கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ்குப்தாவும், பேரறிஞர் அண்ணாவும் ஆற்றிய உரையின் அனல் வீச்சு தமிழ்நாடெங்கும் பரவியது
இந்நிலையில் 1967ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது திமுக. பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றார்.11 ஆண்டுகளாக கோரிக்கைகளாக இருந்ததற்கு முடிவுரை எழுதி, தமிழ்நாட்டுக்கான முன்னுரை எழுதினார் முதலமைச்சர் அண்ணா. 1967 ஜூலை 18 ஆம் தேதி , தமிழ்நாடு பெயர்மாற்றத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார்.
அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலத்தின் பெயரை குறிப்பிடும்போது தமிழ்நாடு என மாற்றி அமைக்கப்பட வேண்டுமென உறுதியாக கருதுவதுடன், அரசியலமைப்பில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மாநில அரசு நடவடிக்கை எடுக்க பேரவை பரிந்துரைக்கிறது” என்றார்.
தீர்மானத்தில் நிறைவுரையாற்றிய அண்ணா, “எதிர்காலத்தில் வரும் தலைமுறையினர், நமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நெடுங்காலத்திற்குப் பிறகு அமர்ந்து பேசுகிற வேளையில் பெருமையோடு சொல்லிக்கொள்ளும் நிகழ்வாக தமிழ்நாடு பெயர் மாற்ற நிகழ்வு அமையும்” என்றார்.
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் முதலமைச்சர் அண்ணா, “தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க” என்று மூன்று முறை முழங்கினார். அனைவரும் வாழ்க என சட்டமன்றம் அதிர முழங்க தீர்மானம் நிறைவேறியது. தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா 1968 நவம்பர் 23ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 1969 ஜனவரி 14 தைப் பொங்கல் நாள் முதல் தமிழ்நாடு என்ற பெயர் மீண்டும் மலர்ந்தது
-ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்
source https://news7tamil.live/is-the-name-tamil-nadu-just-for-politics.html