உதகை அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்காக தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்த நிர்வாகத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் விளக்கம் கேட்டு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே தீட்டுக்கல் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் உதகை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் கடந்த 9ம் தேதியில் இருந்து ஆர்எஸ்எஸ், அமைப்பின் அகில இந்திய அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உதகையில் முகாமிட்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியர்களின் கல்விதரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் அதிருப்தியடைந்து உள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெற்றோர்கள் நடப்பு கல்வியாண்டில் ஏற்கனவே உதகையில் பெய்த கனமழை காரணமாக அண்மையில் இரு நாட்களுக்கு மேல் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. தற்போது ஆர்எஸ்எஸ் கூட்டம் என கூறி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
கூட்டம் நடத்த வேறு இடம் இல்லையா, என இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறைக்கும்
புகார் அனுப்பியுள்ளனர். இப்புகாரின் பேரில் விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட
பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள்
கூறுைகயில், உதகை தீட்டுக்கல் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன.
இப்புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
வழங்கப்பட்டுள்ளது. பள்ளி அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் மேல் நடவடிக்கை
எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
-இள.வாசுதேவன்
source https://news7tamil.live/a-private-school-took-a-week-off-for-the-rss-consultative-meeting-in-utkai-education-officers-letter-asking-for-explanation.html