15 7 23

மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் அவரது மகள் ரோஷினி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நிலையில் அவர்களை அழைத்து ஏன் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,
இந்த நிகழ்ச்சிக்கு ஷிவ் நாடார் வந்திருக்கிறார். பொதுவாக இந்த மாதிரியான பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளமாட்டார். ஆனால் இவரையும் இவரது மகள் ரோஷினியையும் மாணவ மாணவிகளாக நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அழைத்து வந்திருக்கிறேன். மிகப்பெரிய தொழிலதிபர் என்று சொல்வது மட்டும் அவரது பெருமை இல்லை. இந்திய தொழிலதிபர்களில் அதிகமான நன்கொடை வழக்குவர் என்று பாராட்டப்படக்கூடியவர் அவர்.
உனக்கு பணம் வரும்போது அதிகப்படியான உதவிகள் செய் என்று இவரது தாயார் சொன்னார்களாம். அந்த வார்த்தைக்காகவே அறக்கட்டளை தொடங்கியவர் இவர். 50 நாடுகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் வேலை பார்க்கும் அளவுக்கு நிறுவனம் வைத்துள்ள எச்.சி.எல் நிறுவனத்தின் தலைவருமான இவர் உங்களை போல் அரசு பள்ளியில் படித்தவர் தான். பல கிராமங்களை தத்தெடுத்து உதவிகளை செய்து வருகிறார்.
ஒரு கிராமத்தில் பிறந்து மாநகராட்சி பள்ளியில் படித்து சொந்த முயற்சியால் மிக சிறிய நிறுவனத்தை தொடங்கி இன்று இவ்வளவு பெரிய மனிதராக அவர் உயர்ந்திருக்கிறார். இப்படிபட்டவரை உங்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தத்தான் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவரை அழைத்து வந்திருக்கிறேன். அவரது மகள் ரோஷினி அந்த நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
பெண்கள் அனைத்து பொறுப்புகளிலும் இறங்கி பணியாற்ற வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கனவு நிறைவேறும் காட்சிகளின் அடையாளமாக இவர்கள் இருவரும் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் முதலில் உங்கன் அனைவரின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.
தொடர்ந்து பேசிய ஷிவ் நாடார் கூறுகையில்,
எனக்கு முதல்வர் கருணாநிதியை நன்றாக தெரியும். நான் அவரை 4-5 முறை சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவர் தான் நீங்கள் டெல்லிக்கு போயிட்டீங்க தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லையா என்று கேட்டார். அதன்பிறகு தான் நாங்கள் மதுரை, சென்னை திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் தொழில் தொடங்கினோம். இப்போது இங்கிருந்து வெளிநாட்டுக்காக வேலை செய்கிறோம்.
இங்கு எங்களை அழைத்து பெருமை படுத்திய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், மற்ற அமைச்சர் பெருமக்களுக்கும், பொதுமக்களுக்கும் தாய்மார்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி. இங்கு திறந்துள்ள நூலகத்தை பார்த்தோம் நிறைய புத்தகங்கள் இருக்கிறது. அதில் குறிப்பாக கலைஞர் புத்தங்கள் நிறைய உள்ளது. அவர் ஒரு சிறந்த பேச்சாளர் என்று ஷிவ் நாடார் பேசியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilandu-cm-stalin-say-why-invite-shiv-nadar-and-his-daughter-in-kalaigner-library-opening-723641/