வியாழன், 14 செப்டம்பர், 2023

நிபா வைரஸ் – அறிகுறிகள், கண்டறியும் முறைகள் என்ன..? தடுப்பது எப்படி..?

 கொரோனா வைரஸை தொடர்ந்து நிபா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், வைரஸ் தொற்றை கண்டறிவது எப்படி? பரவாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து காணலாம்…

கேரளாவில் 5வது நபருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, கோழிக்கோட்டில் மேலும் ஒரு சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோழிக்கோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கீதா, மொத்தம் 20 பேர் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதில் நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த 789 பேர் கண்டறியப்பட்டு தனிமைபடுத்த அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிபா வைரஸ் பரவுவது எப்படி? அதன் அறிகுறிகள் என்ன? பரவாமல் தடுப்பது எப்படி? சிகிச்சை முறைகள் என்னென்ன? என்பதை காணலாம்…

1998-1999ம் ஆண்டில் மலேசியாவில் மூளைக்காய்ச்சல் மற்றும் சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டனர். பன்றி வளர்ப்பவர்கள் மற்றும் பன்றிகளுடன் தொடர்புடைய தொழில் செய்தவர்களிடம் இருந்து இதுபோன்ற பாதிப்புகள் அதிகம் காணப்பட்டன. இதனால் பன்றிகளிடம் இருந்து பரவும் வைரஸே இந்த வகை நோய்க்கு காரணம் என முடிவு செய்த அந்நாட்டு அரசு சுமார் 10 லட்சம் பன்றிகளை கொல்வதற்கு உத்தரவிட்டது.

‘கும்பங் சங்கை நிபா’ என்ற இடத்தில் உள்ள பன்றி வளர்ப்பவர்களை முதலில் இது பாதித்ததால், ‘நிபா வைரஸ்’ என்றும் ‘நிபா காய்ச்சல்’ என்றும் பெயர் வந்தது. அப்போது, நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 257 பேரில், 105 பேர் இறந்துபோனார்கள். அதன்பிறகு, சிங்கப்பூருக்கும் இந்த நோய் பரவி, 11 பாதிக்கப்பட்டு அதில் ஒருவர் இறந்துபோனார்.முதலில் இதை வேறொரு வைரஸால் ஏற்பட்ட மூளைக்காய்ச்சல் எனத் தவறாகக் கருதிய மலேசிய அரசாங்கம், பன்றிகளைக் கொன்றதுடன், இதற்குக் காரணமாக கியூலெக்ஸ் வகை கொசுக்கள் என நினைத்து அந்த வகை கொசுக்களையும் கட்டுப்படுத்தியது. ஆனால், இவ்வகை மூளைக்காய்ச்சலுக்கு தடுப்பூசி (JE-V) போட்டுக்கொண்டவர்களுக்கும் இந்த மூளைக்காய்ச்சல் எப்படி ஏற்பட்டது என்று ஆராய்ந்தபோதுதான், இதை நிபா என்ற வைரஸ் ஏற்படுத்தியதும், இதை பன்றிகள் பரப்பியது, அவை நோயினால் நலிவடைந்ததும் தெரிய வந்தது.ஆனால் அதனை தொடர்ந்து பன்றிகளுக்கு இந்த வைரஸ் எப்படிப் பரவியது என கேள்வி எழுப்பப்பட்டது. பின்னர் பல்வேறு ஆய்வுகளின் மூலம் வௌவால்களிடம் இருந்து  இந்த வகை வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது. குறிப்பாக, பழம் தின்னும் வௌவால்கள் உடலில் இந்த வைரஸ்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த வைரஸ் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டாலும், இவை 1947-ம் ஆண்டுகளிலேயே தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூரைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இந்தத் தொற்று ஏற்பட்டு 24 பேர் பாதிக்கப்பட்டு அதில் 17 பேர் இறந்துள்ளனர்.

2001-ம் ஆண்டிலும், 2007-ம் ஆண்டிலும் இந்த வைரஸ் பாதிப்பு, சிலிகுரி மற்றும் நொய்டா பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகள் பெரிதும் பாதிக்குப்புக்கு உள்ளானது வங்கதேசம்தான். 2018-ல் கேரள மாநிலத்தின் வட பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.நோய் அறிகுறிகள் என்னென்ன?

பிற வைரஸ் காய்ச்சலைப் போலவே நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, அசதி, இருமல், குமட்டல்/வாந்தி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படலாம். மூளை, சிறுமூளை, நரம்பு மண்டலப் பாதிப்புகளால் அயர்ச்சி ஏற்படும். நிலை தடுமாறும், மனதில் குழப்பம் நிலவும். சிலருக்கு வலிப்பும் ஏற்படலாம். பார்வைக் கோளாறும் ஏற்படலாம். இறுதியில், மயக்க நிலையை அடைந்து மரணம் ஏற்படும். இந்தத் துயர நிலை, நரம்பு பாதிப்பு ஏற்பட்ட ஓரிரு நாள்களிலேயே சம்பவித்துவிடும். வைரஸின் அடைகாக்கும் காலம் 4-14 நாட்கள் ஆகும். இந்த கடுமையான நோயால் சுமார் 40% நோயாளிகள் தங்கள் உயிரை இழக்க நேரிடும்.

கண்டறியும் முறைகள்:

நிபா வைரஸ் தொற்றைக் கண்டறிய, எலிஸா பரிசோதனைகள் உள்ளன. இதன்மூலம், இந்த நோயைக் கண்டுபிடிக்கலாம். மேலும், பிசிஆர் பரிசோதனை மூலமும் இதனை உறுதி செய்யலாம். இப் பரிசோதனையை புணேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிலையத்தில் மட்டுமே செய்ய இயலும். இந்தப் பரிசோதனைக்கு ரத்தம், சிறுநீர், முதுகிலிருந்து பெறப்படும் தண்டுவட நீர், சளி, உமிழ்நீர், தொண்டை மற்றும் நாசிப்பகுதி நீர் ஆகியவை பயன்படுத்தப்படும். மருத்துவ சிகிச்சை

நிபா வைரஸ் காய்ச்சலை ஏற்படுத்தும் பிரத்தியேகமான வைரஸுக்கு எதிராகச் செயல்பட்டு அவற்றை அழிக்கவோ, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவோ இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு தற்சமயம், ரிபாவிரின் (Ribavirin) என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த நிபா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆதரவான கவனிப்பு சிகிச்சையின் முக்கிய அம்சமாகும் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை கண்காணிப்பு தேவைப்படலாம். நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பைத் தவிர்ப்பது மற்றும் நோயுற்றவர்களைச் சந்தித்த பிறகு கைகளை நன்கு கழுவுதல். மருத்துவமனைகளுக்குள் தொற்று பரவாமல் தடுக்க தடுப்பு நர்சிங் மற்றும் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இன்றியமையாதவை.


source https://news7tamil.live/menacing-nipah-virus-what-are-the-symptoms-diagnosis-methods-how-to-prevent.html