திங்கள், 26 ஆகஸ்ட், 2019

வேதாரண்யத்தில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது! August 26, 2019

Image
வேதாரண்யத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டதோடு, காவலர்கள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், சாலையில் நடந்த சென்றவர் மீது, வேன் ஒன்று மோதியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், காவல்நிலையம் அருகே விபத்து ஏற்படுத்திய வேனை வழிமறித்து, அதனை அடித்து நொறுக்கினர். மேலும், வேனை தீ வைத்து கொளுத்தினர். இதனை தடுக்க வந்த காவலர்கள் மீதும், கல்வீசி தாக்குதல் நடத்தினர். 
இதனிடையே, வேன் தீ வைத்து கொளுத்தப்பட்டதை அறிந்த மற்றொரு தரப்பினர், அரிவாள், கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். இதனையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கினர்.  
இந்நிலையில், கல்வீச்சில் காயம் அடைந்த 3 பேர், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த இருதரப்பினரும் மருத்துவமனையில் திரண்டனர். இதனால், அங்கு மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 
மேலும், நகரில் உள்ள அனைத்துக் கடைகளும், உடனடியாக அடைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்த  வன்முறை காரணமாக, வேதாரண்யத்தில் பதற்றம் நிலவுகிறது.  இந்த வன்முறையின்போது அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனங்களை தெரிவித்துக்கொண்டனர். 
credit ns7.tv