திங்கள், 26 ஆகஸ்ட், 2019

கலவர பூமியாக மாறியுள்ள ஹாங்காங் - என்னதான் நடக்கிறது ஹாங்காங்கில்? August 26, 2019


Image
ஹாங்காங்.. இந்த ஒற்றைச் சொல் உலக நாடுகளின் கவனத்தை கடந்த 12 வாரங்களாக தன்னகத்தே ஈர்த்துள்ளது..அப்படி என்னதான் நடக்கிறது ஹாங்காங்கில்? என்கிற கேள்வி பொதுவெளியில் எல்லோருக்குமான ஒன்றாகிவிட்டது.
சீனாவின் தென் கிழக்கு கடல் பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும், ஒரு துண்டு பிரதேசம் தான் ஹாங்காங். 1997ம் ஆண்டுக்குப் பிறகு சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற பகுதியாக இருந்து வரும் ஹாங்காங்குக்கும்,  சீனாவுக்கும், இடையே அவ்வப்போது உரசல்கள் இருந்து வந்த நிலையில் தற்போது அது போராட்டம் என்கிற வடிவத்தில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.  
ஹாங்காங் போராட்டம்
தனி பண மதிப்பு, சட்டம், நிர்வாகம் என தனக்கென்று ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி,  ஒரு தனிப் பிரதேசமாக இருந்து வரும் ஹாங்காங்கில் நடக்கும் போராட்டம் தான், தற்போதைய உலகின் ஹாட் டாப்பிக். ஹாங்காங்கில் இருந்து குற்றவாளிகளை சீனாவுக்கு நாடுகடத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் தொடங்கியது போராட்டம். பின்னர் சீனாவிற்கு எதிரான அதிருப்தி அலைகளின் பின்னணியில் உள்ள பல்வேறு காரணங்களும் சேர்ந்துகொண்டு போராட்டத்தை வலுப்படுத்தி அதனை மாபெரும் மக்கள் இயக்கமாக்கியது.  
போராட்டத்தின் எதிரொலியாக மசோதாவை ஹாங்காங் அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்தாலும், முழுமையாக ரத்து செய்யவில்லை என்பது, போராட்டம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர் முக்கிய காரணமாக அமைந்தது. விமான நிலையத்தை முற்றுகையிடுவது, மழையில் குடைபிடித்து லட்சக்கணக்கானோர் திரண்டு முழக்கம் எழுப்புவது, சாலைகளில் திரண்டு தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேறுவது என நடைபெற்ற போராட்டம், கடந்த சில தினங்களாக வன்முறை களமாக மாறியிருக்கிறது. 
ஹாங்காங் போராட்டம்
கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும், பெப்பர் ஸ்பிரே அடித்தும் போராட்டக்காரர்களை போலீசார் கட்டுப்படுத்த, பதிலுக்கு போராட்டக்காரர்களும் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் ஹாங்காக் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. ஜனநாயகத்தை நிலைநாட்ட வலியுறுத்தி கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தை போல் அடுத்தடுத்து போராட்டங்களை தொடர மக்கள் திட்டமிட்டு வருவதால், ஹாங்காங்கில் அமைதி திரும்புமா அல்லது அடக்குமுறை கட்டவிழ்க்கப்படுமா என்கிற அச்சம் எழுந்துள்ளது.

credit ns7.tv