இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையாக பொருளாதார வீழ்ச்சியடைந்து வருவதற்கு, 2017ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட பணமதிப்பிழப்பு அறிவிப்பும் ஒரு முக்கிய காரணம் என்பது ஆய்வறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
வருமான வரிச் சட்டத்தை புதுப்பிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவின் முன்னாள் தலைவர் அர்பிந்த் மோடி கடந்த 2018 ம் ஆண்டு ஓர் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். அதில் 2010-11ம் நிதி ஆண்டு முதல் 2017-18ம் நிதி ஆண்டு வரையிலான பொருளாதார புள்ளிவிபரங்களை தொகுத்திருக்கிறார்.
2016-17ம் நிதி ஆண்டில் 10,33,847 கோடியாக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த முதலீடுகள் 2017-18ம் நிதிஆண்டில் 4,25,051 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது. ஒரே ஆண்டில் சுமார் 6,08,796 கோடி ரூபாய் முதலீடுகளை இந்தியா இழந்துள்ளது. 2017 - 2018 நிதி ஆண்டில் பணமதிப்பிழப்பை தவிர வேறு பெரிய பொருளாதார நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளாததால் இந்த வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பே காரணம் என்கிற முடிவுக்கு வருகிறார்கள் பொருளாதார வல்லுனர்கள். இதுமட்டுமின்றி 2017-2018ல் நடந்த பல்வேறு பொருளாதார சறுக்கல்களும் அர்பிந்த் மோடியின் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீட்டு சதவீதம் 2015-16 ம் நிதிஆண்டில் 7.5 சதவீதமாக இருந்த நிலையில் 2016-17ம் நிதிஆண்டில் வெறும் 2.7 சதவீதமாக சரிந்திருக்கிறது. அதேபோல, 2017-18 ஆம் ஆண்டுக்கான வரிவிதிப்புகளை தாக்கல் செய்த 7,80,216 நிறுவனங்களில், 45.94 சதவீத கார்ப்பரேட் நிறுவனங்கள் இழப்புகளை சந்தித்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளன. இவற்றுக்கெல்லாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் காரணம் என்கிற பார்வை முன்வைக்கப்படுகிறது.
உண்மையிலேயே பணமதிப்பிழப்புதான் காரணமா என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ள தேவையான அறிக்கைகள் தற்போது நேரடி வரிவிதிப்பில் மாற்றங்களை செய்ய நியமிக்கப்பட்ட பணிக்குழுவினால் மத்திய அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் உள்ள விபரங்களை நிதி அமைச்சகம் இதுவரை வெளியிடவில்லை. இந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டால் மட்டுமே பொருளாதார மந்தநிலையில் பணமதிப்பிழப்பின் பாதிப்பு எவ்வளவு என்பது தெரியவரும்.
credit ns7.tv