credit ns7.tv
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட, சிபிஐ காவல் முடிவடைய உள்ள நிலையில், அவரது முன்ஜாமீன் மனு மீதான விசாரணை, இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். கைது நடவடிக்கைக்கு முன்னர், முன்ஜாமீன் கேட்டு அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள் அதனை, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியிருந்தனர்.
இதனிடையே ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட 5 நாள் சி.பி.ஐ காவல், இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனால் அவரை மீண்டும் அதிகாரிகள், இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளனர். அப்போது அவரது காவலை மேலும் நீட்டிக்க வேண்டும், என சி.பி.ஐ தரப்பில் வேண்டுகோள் விடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன், இன்று விசாரணைக்கு வர உள்ளது.
மேலும், தம்மை சிபிஐ காவலுக்கு அனுப்பி, சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ப.சிதம்பரம் தாக்கல் செய்த புதிய மனு மீதான விசாரணையும், இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.