/indian-express-tamil/media/media_files/2026/02/04/mamata-banarjee-2026-02-04-15-38-27.jpg)
இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு அபூர்வ நிகழ்வாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக உணர்ச்சிப்பூர்வமாக வாதிட்டார். மாநிலத்தில் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், கைகளைக் கூப்பி "ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்" என்று நீதிபதிகளிடம் முறையிட்டார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த விசாரணை நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் தலைமையிலான வழக்கறிஞர் குழுவுடன் வந்திருந்த மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் பேசுவதற்கு அனுமதி கோரினார். தான் பேசுவதற்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் போதும் என்று அவர் கேட்டபோது, தலைமை நீதிபதி அவருக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கினார்.
தனது வாதத்தைத் தொடங்கும் முன் நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் நன்றி தெரிவித்த மம்தா, ரவீந்திரநாத் தாகூரின் வரிகளை மேற்கோள் காட்டினார். "எங்கள் வழக்கறிஞர்கள் ஆரம்பத்திலிருந்தே நீதிக்காகப் போராடுகிறார்கள், ஆனால் நீதி கிடைக்காதபோது, நீதி கதவுகளுக்குப் பின்னால் நின்று அழுகிறது," என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் நான்காவது முறையாக ஆட்சியைப் பிடிக்க மம்தா பானர்ஜி தயாராகி வரும் நிலையில், அம்மாநில அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை தன்னிச்சையாகவும், அவசர கதியிலும் செய்யப்படுவதாக மாநில அரசு குற்றம் சாட்டுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் இது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்று கூறி வருகிறது.
நீதிமன்றத்தில் வாதிட்ட மம்தா பானர்ஜி, இந்தச் சிறப்புத் திருத்த நடவடிக்கை என்பது வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக அல்ல, மாறாக அவர்களைத் தரம் பிரித்து நீக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். இது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு ஆறு கடிதங்கள் எழுதியும் எவ்விதப் பதிலும் வரவில்லை என்று ஆதங்கப்பட்டார். "நான் ஒரு கொத்தடிமை தொழிலாளி. நான் மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய மனுஷி," என்று அவர் தன்னை நீதிமன்றத்தில் அடையாளப்படுத்திக் கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பெயரை மாற்றும் பெண்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து தவறாக நீக்கப்படுவதாகப் புகைப்பட ஆதாரங்களுடன் அவர் சுட்டிக்காட்டினார். வழக்கமாக இரண்டு ஆண்டுகள் நடைபெறும் இந்தப் பணி, வங்காளத்தில் மட்டும் மூன்று மாதங்களில் முடிக்கப்படுவதாகக் கேள்வி எழுப்பிய அவர், இதன் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பல அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டதாகவும் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தார். "பாஜக ஆளும் அசாமில் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், வங்காளம் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறது?" என்று அவர் வினவினார்.
சுமார் 58 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். தேர்தல் ஆணையத்தை "வாட்ஸ்அப் ஆணையம்" என்று விமர்சித்த அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து வரும் நுண் பார்வையாளர்கள் தன்னிச்சையாகப் பெயர்களை நீக்குவதாகக் குற்றம் சாட்டினார். இருப்பினும், வாக்காளர் அடையாளத்திற்காக ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அனுமதித்த நீதிமன்றத்தின் முடிவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
மம்தா பானர்ஜியின் வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பாகப் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கும், மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த நிகழ்வைத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு பெரிய வெற்றியாகக் கொண்டாடி வருகிறது. மம்தா பானர்ஜி ஒரு வழக்கறிஞராக அங்கியணிந்து, உண்மைகளை நீதிமன்றத்தில் முன்வைத்து தேர்தல் ஆணையத்தைப் பதில் சொல்ல வைத்துள்ளார் என்று அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கனிவுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், நுண் பார்வையாளர்களின் தேவை இருக்காது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளதாக அக்கட்சித் தரப்பு கூறியுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/mamata-banerjee-appears-in-lawyers-robe-at-supreme-court-to-argue-against-election-commission-11075613





