செவ்வாய், 23 ஜூன், 2026

என்.டி.ஏ.வில் இருந்து விலகுகிறோம்;

 தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். மேலும், “கொள்ளை அடித்தவர்கள்தான் அ.தி.மு.க-வில் இருந்து த.வெ.க-வில் சேர்கிறார்கள் என்று ஒரு சொம்பு பாலில் துளி விஷம் சேர்ந்தால் அது முழுவதும் விஷம்தான். இது த.வெ.க ஆட்சிக்கு அழிவுதான்” என்று ஜான் பாண்டியன் கூறினார். 

"ஒரு சொம்பு பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் அது விஷம்தான்; கொள்ளையடித்தவர்களைச் சேர்த்துக் கொண்டால் த.வெ.க ஆட்சிக்கு அழிவுதான்" என்று விமர்சித்துள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து தனது கட்சி விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

மாநில செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதிதாக பதவியேற்றுள்ள த.வெ.க அரசுக்கு தனது கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதே நேரத்தில், மாநிலத்தில் கொலை, பாலியல் வன்முறை, கஞ்சா உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எதிர்கால தேர்தல்களில் எந்தக் கூட்டணியுடன் பயணிப்பது என்பது குறித்து பின்னர் பொதுக்குழு மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

ஆகாஷ் கொலை வழக்கை குறிப்பிட்ட அவர், ஆகாஷ் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும், சில விஷயங்கள் முதலமைச்சர் விஜய் பார்வைக்கு செல்வதில்லை என்றும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் வாக்களித்துள்ளதாகக் கூறிய ஜான் பாண்டியன், மக்களின் எதிர்பார்ப்புகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது என்று அறிவித்த தலைவர் ஜான்பாண்டியன், கூட்டணி இல்லாவிட்டாலும் நட்பு தொடரும் என்று கூறினார். கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் எடுக்கப்படும் முடிவு என்றும் கூறினார்..

மேலும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியா அல்லது கூட்டணியா என்பது குறித்து அந்த சமயத்தில் முடிவெடுக்க முடியும் எனவும் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

“அ.தி.மு.க-வில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு அத்தொகுதி மக்களிடையே எதிர்ப்புதான் இருக்கிறது. கொள்ளை அடித்தவர்கள்தான் சேர்கிறார்கள். அவர்களை சேர்த்துக்கொண்டால் இவர்கள் எப்படி தூய ஆட்சி என சொல்ல முடியும். ஒரு சொம்பு பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் அது முழுக்க விஷமாகத்தான் மாறும். இது த.வெ.க ஆட்சிக்கு அழிவுதான்.” என்று ஜான் பாண்டியன் கூறினார்.

முதலமைச்சர் விஜய், அதிகாரப் பகிர்வு என எடுத்திருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது என்று கூறிய ஜான் பாண்டியன், ட “தமிழ்நாட்டில் நிறைய பாலியல் வன்கொடுமைகள் நடக்கிறது, ஆனால், முதலமைச்சர் விஜய் எதையுமே பேசவில்லை, மௌன விரதம் கடைபிடிக்கிறார். முதலமைச்சர் என்ன நினைக்கிறார் என்பதை அறிய மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர். அதற்கு அவர் வாய் திறந்து பேசவேண்டும்” என்று அவர் கூறினார்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/john-pandian-quits-bjp-nda-alliance-criticizes-tvk-vijay-government-12063677