/indian-express-tamil/media/media_files/2026/02/04/cuddalore-collector-2026-02-04-21-44-35.jpg)
ரூ.15 கோடி முதலீடு, 550 பேருக்கு வேலை... மெரினா தரத்தில் ஜொலிக்கப் போகும் கடலூர் சில்வர் பீச்
கடலூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையை (Silver Beach) சர்வதேச தரத்திலான சுற்றுலா தலமாக மேம்படுத்த, மாவட்ட நிர்வாகம் மற்றும் 'பாண்டி மெரினா' நிறுவனத்திற்கு இடையே முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையெழுத்தானது. இதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.
தமிழக அரசின் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பாண்டி மெரினா நிறுவனம் அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் வெள்ளிக் கடற்கரையைச் சீரமைக்க உள்ளது. இதன் மூலம் உள்ளூர் மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கடற்கரை வளாகத்தில் உலகதர வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான நவீன விளையாட்டு மற்றும் கேளிக்கை சாதனங்கள். அகலமான சாலைகள், நேர்த்தியான பூங்கா மற்றும் விசாலமான வாகன நிறுத்த வசதி, சுகாதாரமான உணவகங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் தயாரிப்புகளை விற்பனை செய்யத் தனி விற்பனை அங்காடிகள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் மூலம் கடலூர் மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரும் நன்மைகள் கிடைக்கவுள்ளன. சுமார் 150 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 400 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் உள்ளூர் வியாபாரிகள், சிறுதொழில் செய்பவர்கள் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்கள் பெரும் வளர்ச்சியடையும்.
கடலூர் மாவட்ட மக்கள் தங்கள் குடும்பங்களுடன் இனி வெளியூர்களுக்குச் செல்லாமல், தங்கள் பகுதியிலேயே உலகத் தரத்திலான வசதிகள் உடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/silver-beach-to-shine-brighter-cuddalore-partners-with-pondy-marina-for-15-crore-transformation-11076895





