புதன், 11 பிப்ரவரி, 2026

எப்ஸ்டீன் பைல்ஸ் சர்ச்சை... பிரிட்டன் பிரதமராகும் முதல் ஷபானா மஹ்மூத்?

 

mammooth

கடந்த 2019-ஆம் ஆண்டு சிறுமிகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் என அனைவருடனும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். இவர் கைது செய்யப்பட்ட சில வாரங்களிலேயே சிறையிலேயே உயிரிழந்தார். 

இவரது இறப்பு தற்கொலை தான் என்று கூறப்பட்ட நிலையில் அவரது மரணம் பல சர்ச்சைகளை கிளப்பியது. சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பைல்ஸை வெளியிட்டது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல பிரபலங்களின் பெயர்கள் அடிப்பட்டது. அமெரிக்காவின் மறைந்த நிதி ஆலோசகரான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் நெருங்கிய நண்பராக இருந்த பீட்டர் மண்டேல்சன் அமெரிக்காவிற்கான பிரிட்டிஷ் தூதராக நியமிக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால்,  இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நாட்டில் அதிக அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார். இந்த நேரத்தில் ஸ்டார்மரின் தலைமைத் தளபதியும் நெருங்கிய உதவியாளருமான மோர்கன் மெக்ஸ்வீனி தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஸ்டார்மரின் பதவி கேள்விக்குறியாகி உள்ளது. ஸ்டாமர் தனது கட்சி உறுப்பினர்களை ஆதரவு தரும்படி வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த பிரதமராக யார் வரக் கூடும் என்பது குறித்த யூகங்கள் பரவத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத்தின் பெயரும் இதில் அடிபடுகிறது. ஒருவேளை, மஹ்மூத் இங்கிலாந்து பிரதமராக  தேர்வு செய்யப்பட்டால் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்தின் முதல் பிரதமராகவும், அந்தப் பதவியை வகிக்கும்  முதல் முஸ்லிம் பெண்ணாகவும் வரலாறு படைப்பார். 

யார் இந்த ஷபானா மஹ்மூத்?

உள்துறை அலுவலகத்தில் உயர் பதவியை வகிக்கும் முதல் முஸ்லிம் பெண்மணி மஹ்மூத் ஆவார். 1980-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் பிறந்த இவர் தனது முதல் ஐந்து ஆண்டுகள் சவுத் அரேபியாவில் வசித்து வந்துள்ளார். 2003-ஆம் ஆண்டு வழக்கறிஞரான இவர் 2010-ஆம் ஆண்டு பர்மிங்காம் லேடிவுட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்தின் முதல் பெண் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மஹ்மூத்தும் ஒருவராவார். தற்போது இங்கிலாந்து அரசின் உள்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.


source https://tamil.indianexpress.com/international/epstin-file-issue-shabana-mahmood-be-uk-next-pm-11094013