28 06 2026
/indian-express-tamil/media/media_files/2026/06/27/arasakumar-2026-06-27-20-41-13.jpg)
பள்ளி அனுமதி பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி: சிக்கிய தி.மு.க பிரமுகர் பி.டி.அரசகுமார்
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை லஞ்சமாகப் பெற்று மோசடியில் ஈடுபட்ட புகாரில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவரும், தி.மு.க நிர்வாகியுமான பி.டி. அரசகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகங்கள் அளித்த அடுக்கடுக்கான புகார்களின் அடிப்படையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, இந்த 100 கோடி ரூபாய் மோசடி வழக்கில் இருவர் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் குற்றவாளி (A1) பி.டி. அரசகுமார் (கைது) தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனர் தலைவர். சென்னை சாலிகிராமம், மெஜஸ்டிக் காலனியில் வசிக்கும் இவர், தமிழக அரசியல் வட்டாரத்தில் நன்கு அறியப்பட்டவர். முன்பு பா.ஜ.கவில் முக்கியப் பொறுப்பு வகித்த இவர், பின்னர் அங்கிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது குற்றவாளி (A2) முத்துக்குமார், சங்கத்தின் பொருளாளர். இவர் பி.டி. அரசகுமாருடன் இணைந்து பள்ளி நிர்வாகிகளிடம் பேசி, பணப் பரிமாற்றங்களை ஒருங்கிணைத்த முக் கியக் கூட்டாளி ஆவார். இவர்கள் தவிர, இந்த மிகப்பெரிய முறைகேட்டில் தொடர்புடைய மேலும் சில நபர்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகங்களிடம், பள்ளி அங்கீகாரம் (Recognition), பள்ளி தர உயர்வு (Upgradation) மற்றும் சி.எம்.டி.ஏ (CMDA), டிடிசிபி (DTCP) அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை, தங்களுக்கு கல்வித்துறை மட்டத்திலும் அரசியல் ரீதியாகவும் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி விரைவாகப் பெற்றுத் தருவதாக இந்த இருவர் தரப்பிலிருந்தும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி நிர்வாகிகள் இவர்களிடம் பல லட்ச ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், வாக்குறுதி அளித்தபடி அனுமதிகளைப் பெற்றுத் தராமலும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமலும் இவர்கள் இழுத்தடித்துள்ளனர். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகள், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை நாடிப் புகாரளித்தனர்.
போலி வாக்குறுதி அளித்து பணம் பெற்றது, மோசடி செய்தது மற்றும் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்தது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே தற்போது பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் முந்தைய தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகப் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், இடைத்தரகர்களாகச் செயல்பட்ட இவர்களால் வசூலிக்கப்பட்ட லஞ்சப் பணம், அப்போதைய பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் கைமாறியுள்ளதா என்ற பலத்த சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகள், வங்கி கணக்கு பதிவுகள், ஆவணங்கள் மற்றும் தொலைபேசி தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
புகாரளித்த பள்ளி நிர்வாகங்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மற்றும் ஆவண சோதனையில் புதிய ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில், கல்வித்துறையைச் சேர்ந்த மேலும் சில முக்கியப் புள்ளிகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்காகப் பல்வேறு துறைகளில் இருந்து நிதி வசூலிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தற்போது ஆளுங்கட்சி நிர்வாகி ஆதிக்கம் செலுத்திய தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் 100 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/private-school-approvals-under-scanner-100-crore-private-school-recognition-scam-dmk-leader-pt-arasakumar-arrested-by-chennai-ccb-12112719





