திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் பகுதியில், புதிய மேம்பால சுரங்கப்பாதை அமைக்கக் கோரி சுற்றுவட்டாரக் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-திருச்சி வழித்தடத்தில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (என்எச்-38) சஞ்சீவி நகா் - திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1963-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. இந்த வழித்தடம் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டபோது, இதன் அருகே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டிற்குப் பிறகு, தற்போது 16 ஆண்டுகள் கழித்து பழைய காவிரி பாலத்தில் மீண்டும் பராமரிப்புப் பணி மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. இதற்காக ஜூன் 25 முதல் இந்தப் பாலம் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டு, நேற்று முன் தினம் இரவு பணிகள் தொடங்கின.
பாலம் மூடப்பட்டதால் கல்லணை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களது அன்றாடத் தேவைகளுக்கும் வேலைகளுக்கும் செல்ல வெகுதூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சஞ்சீவி நகர் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதால், அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்தச் சூழலில், பழைய பாலம் மூடப்பட்டதால் புதிய பாலத்தில் வாகனங்கள் இரு வழிப் பாதையாக (Two-way) மாற்றி இயக்கப்பட்டன. இதன் காரணமாகப் போக்குவரத்து நெரிசலும் நேர விரையமும் ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இந்த மாற்று வழிப் பாதிப்புகளைக் கண்டித்து, இன்று 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் குதித்தனர்.
பொதுமக்களின் இந்தத் திடீர் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சுமார் 5 கிலோ மீட்டருக்கும் மேலாக நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. ஓயாமரி சாலை, காவிரி பாலம், மாம்பழ சாலை, திருவானைக்காவல், கும்பகோணத்தான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 கி.மீ. தொலைவுக்குப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட வருவாய் அதிகாரி பாலாஜி, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி மற்றும் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின், சுமார் 4 மணி நேரம் நீடித்த போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் எனப் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
முன்னதாக, பேச்சுவார்த்தையின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இது பின் மோதலாக மாறியதால், போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது ஏற்பட்ட பலத்த தள்ளுமுள்ளுவில், திருச்சி உதவி காவல் ஆணையர் விஜயகுமார் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இந்த மோதலில் பொதுமக்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு நிலவியது.
செய்தி: க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/public-protest-blocks-trichy-chennai-national-highway-assistant-commissioner-injured-over-50-arrested-12112521





