/indian-express-tamil/media/media_files/2025/12/06/pr-pandiyan-2025-12-06-18-13-31.jpg)
ஜூன் 30-ல் சென்னையில் விவசாயிகள் மாபெரும் உண்ணாவிரதம்: முழு கடன் தள்ளுபடி செய்ய பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்
தமிழக அரசு, 'தமிழக வெற்றிக் கழகம்' தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்த அம்சங்களின் அடிப்படையில் சிறுகுறு விவசாயிகளுக்கு 100%, பெரு விவசாயிகளுக்கு 50% நிலத்தின் அடிப்படையில் (மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி) வேளாண் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்திட வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்துடன், நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாய் விலை நிர்ணயம் செய்து செப்டம்பர் 1-ம் தேதி முதல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 30-ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி சேவா பவனில், மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம்பிரசாத், உறுப்பினர் செயலரும் மேகதாட்டு திட்டத்தின் பொறுப்பு அதிகாரியுமான யோகேஷ்பாட்டன்கர் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தார் ஆகியோரை பி.ஆர். பாண்டியன் தலைமையில் கிருஷ்ணகிரி பாலசிவபிரசாத், தொட்டியம் சஞ்சீவி ஆகியோர் நேரில் சந்தித்து 45 நிமிடங்கள் ஆலோசித்தனர்.
கர்நாடகம் உபரி நீரை மட்டுமே விடுத்து வருகிறது; காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணைகளைக் கட்ட முடியாது. உச்ச நீதிமன்றத்தின் அரசிதழ் உத்தரவின் படி 15 ஆண்டுகளுக்கு இதில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. எனவே, கர்நாடகாவின் மேகதாட்டு வரைவு திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்ப வேண்டும். மைசூரில் 2024-ல் இரு மாநில விவசாயிகளும் ஒன்றாக அமர்ந்து பேசியபோது, மேகதாட்டு அணை கர்நாடக விவசாயிகளுக்கே தேவையில்லை என அவர்கள் தீர்மானித்துள்ளனர். ஏனெனில், கிருஷ்ணராஜசாகர் அணைக்குக் கீழே மேகதாட்டு கட்டப்பட்டால், பற்றாக்குறை காலத்தில் குடிநீர் என்கிற பெயரில் மேகதாட்டுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டு கிருஷ்ணராஜசாகர் அணை புறக்கணிக்கப்படும். அதற்குப் பதிலாக 'ராசிமணல்' பகுதியில் தமிழகம் அணைக்கட்டிக் கொண்டால் கர்நாடகம் தேவையான குடிநீரை எடுத்துக் கொள்ளலாம் என இரு மாநில விவசாயிகளும் முடிவெடுத்துள்ளனர்.
காவிரி டெல்டாவில் கடல் முகத்துவார நதிகள் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு 6 ஆண்டுகளாக மத்திய அரசு அனுமதி தராததால் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்க முடியவில்லை. இது குறித்து மத்திய அதிகாரிகள் பேசுகையில், வெண்ணாறு கடல் முகத்துவார நதிகள் மறுசீரமைப்புத் திட்டத்திற்குத் தங்களுக்கு அனுமதி தரத் தயாராக இருப்பதாகவும், ஆனால் இத்திட்டத்தைத் திரும்பப் பெறுவதாகத் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தனர். நடப்பு 2026-ம் ஆண்டில் காவிரி டெல்டாவில் குறுவைச் சாகுபடிக்குத் தண்ணீர் இல்லாமல் நிலங்கள் வறண்டு கிடப்பதாகவும், இதனால் டெல்டா விவசாயிகள் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்திருப்பதாகவும் பி.ஆர். பாண்டியன் சுட்டிக்காட்டினார்.
மத்திய அதிகாரிகள் இதுகுறித்து பேசுகையில், நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு உரிய 78 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டில் உள்ளதாக கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டனர். இதற்குப் பதில் அளித்த பி.ஆர். பாண்டியன், கர்நாடக தலைமைச் செயலாளரின் கடிதம் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாமல் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. தவறான தகவல் எழுதிய கர்நாடக தலைமைச் செயலருக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை கேட்டறிந்த மத்திய அதிகாரிகள், மேகதாட்டு விவகாரத்தில் சட்டப்படியும், நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும் மட்டுமே முடிவெடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். மேலும், விரைவில் கர்நாடகா மற்றும் தமிழக காவிரி டெல்டா பாசனப் பகுதிகளையும், அணைகளையும் நேரில் பார்வையிட முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு வருவதாக உறுதி அளித்துள்ளனர். இச்சந்திப்பு தமிழக விவசாயிகளுக்குப் பெரும் நம்பிக்கை அளிப்பதாக பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/truth-behind-delta-kuruvai-crisis-farmers-to-hold-massive-fasting-protest-in-chennai-on-june-30-demanding-complete-loan-waiver-12112820





