புதுக்கோட்டை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசிப் பணிகள்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், திருமலைராய சமுத்திரத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 9–வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் தொடங்கி வைத்து கூறியதாவது:–
தமிழ்நாடு முதலமைச்சர் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். இதன்படி தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 9–வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணிகளை தொடங்க உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் திருமலை ராயசமுத்திரத்தில் 9–வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நமது மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் இத்தடுப்பூசிப்பணிகள் (01.09.2015) முதல் 21.09.2015 வரை 21 நாட்களுக்கு காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரையிலும், மதியம் 03.00 மணி முதல் 05.00 வரையிலும் மேற்கொள்ளப்படும்.
இதில் 60 கால்நடை மருத்துவக்குழுக்கள் மூலம் மாவட்டத்திலுள்ள 386659 கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படும். எனவே, இம்முகாமின் மூலம் கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியினை தவறாமல் போட்டு கால்நடைகளை கோமாரி நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.