வெள்ளி, 9 அக்டோபர், 2015

இந்தியாவிலேயே தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான்..

கேரளா பொதுப்பணித்துறை மூத்த பொறியாளார் அவர்.. தற்போது அரசியலில் உள்ளார்.. அவரை இன்று சந்தித்து ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிக்க நேர்ந்தது. நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படுவது பற்றி ஒரு தகவலை என்னிடம் பகிர்ந்தார்..
இந்தியாவிலேயே தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான்.. கேரளாவுக்கு முல்லை பெரியாறு, கர்நாடகாவுக்கு காவிரி, ஆந்திராவுக்கு கிருஷ்ணா.. ஆனால் தமிழகத்திற்கு??
ரொம்பவும் பரிதாபப்பட்டு கொள்ளாதீர்கள்.. இந்த மாநிலங்களை விடவும் அதிக நீர்வளம் உங்கள் மாநிலத்தில்தான் உள்ளது.. ஆனால் இப்போது இல்லை. காமாராஜர் ஆட்சிக்குப் பின் வந்த எந்த அரசும் நீர்நிலைகள் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை.
விளைவு, தமிழகத்தில் 5 ஆயிரம் குளங்கள் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளது.. 45 சதவீதம் குளங்கள் மறைந்துவிட்டன. இவ்வளவு நடந்த பின்னரும் கூட, நீர்நிலைகளை அழிவிலிருந்து காக்க அரசு முன்வரவில்லை..
தமிழகத்தில் நீர்வளம் பெருமளவு குறைந்துவிட்டது. இப்போதும்கூட நீர்வளத்தை அதிகரிப்பதற்கு வழி தேடாமல், அண்டை மாநிலங்களிடம் தண்ணீர் கேட்டு அலைகிறீர்கள்.. தமிழகத்தின் நீராதாரம் எந்தளவுக்கு அழிவடைந்து வருகிறது என்பதைப்பற்றி நம்மாழ்வார் அவர்கள் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறார்.. ஆனால் யாரும் செவிசாய்க்கவில்லை..
உண்மையிலேயே அரசுக்கு மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் மீது அக்கறை இருந்தால், தண்ணீர் பற்றாக்குறைக்கு உண்மையாகவே நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற நினைப்பிருந்தால், தண்ணீருக்காக கையேந்தி நிற்பதை முதலில் விடுங்கள்..
தமிழகத்தில் உள்ள அணைகள், குளங்கள், ஏரிகள், கணவாய்கள் போன்ற நீர்நிலைகளை தூர்வாரி நீர் சேமிப்பை அதிகரிக்கச் செய்யுங்கள். எஞ்சியிருக்கும் நீர்நிலைகளையாவது ஆக்கிரமிப்பிலிருந்து தடுத்து நிறுத்துங்கள்.. மழைநீர் சேமிப்பு திட்டத்தை விரிவாக்கம் செய்யுங்கள்.. அணை, ஆறுகளில் மணல் கொள்ளையை முழுவதுமாக தடுங்கள்.. தமிழகத்தில் ஓடும் ஆறுகளை இணைத்து நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துங்கள்..
இதுமட்டும் நடந்தால் தமிழகம் தனது தேவை போக, அண்டை மாநிலங்களுக்கு தண்ணீர் கொடுக்கும் அளவுக்கு நீர்வளம் பெருகும் வாய்ப்பிருக்கிறது..
ஆனால் அப்படி செய்ய மாட்டார்கள்.. ஏனென்றால் வெற்றிகரமான அரசியலுக்கு பெரிய அளவிலான நிரந்தர பிரச்சினை ஒன்று வேண்டும்..
thanks to Ambuja Simi
Ambuja Simi's photo.

Related Posts: