செவ்வாய், 10 நவம்பர், 2015

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குறிஞ்சான் கீரை - மூலிகை மருத்துவம்

Karthikeyan L's photo.
குறிஞ்சாக் கீரையில் இருவகை உண்டு. சிறுகுறிஞ்சான், பெருங்குறிஞ்சான். சிறுகுறிஞ்சான் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் இதன் பயன்பாடு அதிகம். இது கொடி வகையைச் சார்ந்தது. மரங்களில் கொடியாகப் படரும். கசப்புச் சுவை கொண்டதால் இதனை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவதில்லை.
இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது. சிறுகுறிஞ்சான் வாதமொடு சீதத்தை நீக்கும். நீரிழிவு நோயாளிகளின் முக்கிய உணவாக உட்கொள்ள வேண்டிய கீரை குறிஞ்சாக் கீரைதான். sirukurinjan நீரிழிவு நோயாளிகளின் பாதிப்புகள் குறைய குறிஞ்சாக் கீரை மிகவும் உதவுகிறது. அதிக கசப்புத் தன்மை கொண்ட இந்தக் கீரை உடலின் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படாமல் வருமுன் காக்க குறிஞ்சாக் கீரை சிறந்த மருந்தாகும்.
குறிஞ்சாக் கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது நீர்விட்டு அவித்து சிறிது நேரம் அப்படியே ஊறவைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும். நாவற்பழக் கொட்டையையும், சிறுகுறிஞ்சான் கீரையையும் நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலையில் 1 குவளை தண்ணீருக்கு 1 தேக்கரண்டி பொடி வீதம் இட்டு காய்ச்சி கஷாயமாக்கி அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
உணவு முறை மாறுபாட்டாலும், நேரம் தவறி உணவு உண்பதாலும் வாயு சம்பந்தப்பட்ட உணவுகளை அடிக்கடி உண்பதாலும் சிலரின் வயிற்றில் வாயுவின் சீற்றம் மிகுந்து குடலின் உட்புறச் சுவர்களைப் பாதிக்கிறது. மேலும் மது, புகை, போதை வஸ்துக்களாலும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உண்டாகும். இவர்கள் குறிஞ்சாக் கீரையை பாசிப் பருப்புடன் சேர்த்து காரம் சேர்க்காமல் வேகவைத்து கடைந்து நெய் கலந்து உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் விரைவில் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.