வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
நாகை மாவட்டத்தில் இடைவிடாது பெய்யும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. செல்லூர் சவேரியார் கோவில் தெரு, பாலையூர் சுனாமி குடியிருப்புகள் மற்றும் பல தாழ்வான பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
கடல் சீற்றத்துடன் காணப்படுவதால்,மாவட்டம் முழுவதும் 1500 விசைப்படகுகள் மற்றும் 4500 பைபர் படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விளைநிலங்களில் வெள்ளம் புகுந்ததால் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ஜெயபால் நேரில் ஆய்வு செய்தார். கும்பகோணம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்மழை காரணமாக சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் முழ்கியுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் கூத்தென்குளி, உவரி , இடிந்தகரை உட்பட 13 கிராமங்களைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
விழுப்புரம் மாவட்டம் அத்தியூர்,திருவாதி,பிடாகம்,வேலியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராகியிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.