மோடியின் தொகுதியான வாரணாசியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி படுதோல்வியடைந்துள்ளது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களின் முடிவில் ஆளும் சமாஜ்வாதி கட்சி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியிலுள்ள 48 இடங்களில் 40 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி படுதோல்வியடைந்துள்ளது. இங்கு முதலிடத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சியும் இரண்டாம் இடத்தைப் பகுஜன் சமாஜ் கட்சியும் பெற்றுள்ளன.
மோடி தத்தெடுத்திருந்த வாரணாசியிலுள்ள ஜோயபூர் கிராமத்திலும் பாரதீய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அதே போன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் லக்னோ தொகுதியிலும் பாரதீய ஜனதா கட்சி படுதோல்வியடைந்துள்ளது. இங்குள்ள 26 இடங்களில் 20 இடங்கள் கைவிட்டுப்போயுள்ளன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 80 இடங்களில் 73 இடங்களைப் பாரதீய ஜனதா கட்சி கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முந்தைய வெள்ளோட்டமாக இந்த உள்ளாட்சி தேர்தல் பார்க்கப்படுவதால், பாரதீய ஜனதா கட்சியினர் பெரும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.
பாரதீய ஜனதா கட்சியினைப் போன்றே காங்கிரஸ் கட்சியும் பெருவாரியான இடங்களில் தோல்வியையே சந்தித்துள்ளது. இதற்கிடையில், ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான முலாயம் சிங்கின் தொகுதியிலுள்ள அசம்கரில், அசாதுத்தீன் உவைஸியின் கட்சியான மஜ்லிஸே இஜ்திஹாதுல் முஸ்லிமீன் வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- இந்நேரம்