கடல்கொண்டபின் எஞ்சிய ‘சங்ககாலத் தமிழகம்’ இதுதான். தமிழறிஞர்கள் முன்வைக்கும் பழந்தமிழக வரைபடம். வடவெல்லையாய்த் தற்போதைய ஆந்திரத்தின் வடபெண்ணை ஆறு. வடமேற்கே காவிரி ஆற்றின் நீர்கொள்பகுதிகள் யாவும் தமிழகமே. தலைக்காவிரி முதற்றே காவிரி கிழக்காய்த் திரும்பும் கரூர்வரை, அக்காலத் தமிழகத்தின் பெரும்பரப்பாகத் திகழ்ந்தது கொங்கு நாடே. பெருக்கற்குறிபோல் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் காவிரி ஆறும் கொங்கு நாட்டைப் பிரித்ததால் இதற்குள் படையெடுத்து வருதல் கொடுங்கனவே. சேர சோழ பாண்டிய நாடுகளோடு தொண்டைநாடு, கொங்குநாடு, துளுநாடு என்னும் ஆறுநாடுகள். ஆறு நாடுகளுள் கடற்கரை இல்லாத நாடும் கொங்கு நாடுதான். தமிழகத்தின் கடல்களை அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் என்பதுகூட பெயர்த்திணிப்பே. அம்மூன்று கடல்நீர்ப்பரப்பும் முடியுமிடத்தை வைத்து மேற்கத்தியர்கள் அப்பெயரை வைத்தார்கள் என்றாலும்கூட குணகடல், குடகடல், குமரிக்கடல் என்று நம் முன்னோர் வழங்கியதை மறந்துவிட்டோம், பாருங்கள் !