திங்கள், 5 ஜூன், 2017

கட்டணத்தை மும்மடங்கு உயர்த்தியதால் பயணிகள் அதிர்ச்சி! June 05, 2017

கட்டணத்தை மும்மடங்கு உயர்த்தியதால் பயணிகள் அதிர்ச்சி!


100 முக்கிய ரயில்களில் ப்ரீமியம் தட்கல் முன்பதிவு கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் முன்னறிவிப்பின்றி அறிமுகம் செய்திருப்பதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

பண்டிகை உள்ளிட்ட முக்கிய காலங்களில் ரயில்களில் பயணிக்க, 'ப்ரீமியம் தட்கல் டிக்கெட் திட்டம்' மூலம் ரயில் டிக்கெட்டை பயணிகள் முன்பதிவு செய்வது வழக்கம். குறைந்த எண்ணிக்கையிலான ரயில்களில் மட்டுமே இந்த திட்டம் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், தெற்கு ரயில்வே எந்தவித முன்னறிவிப்பின்றி 100 ரயில்களில் பிரிமியம் தட்கல் கட்டணத்தை அறிமுகம் செய்துள்ளது.

திருவனந்தபுரம் மெயில், கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 100 முக்கிய ரயில்களில், ப்ரீமியம் தட்கல் முன்பதிவு கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸில், சாதாரணமாக படுக்கை வசதிக்கு டிக்கெட் கட்டணம் 315 ரூபாயாக உள்ள நிலையில், பிரிமீயம் தட்கல் முன்பதிவில் இது 900 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 30 சதவீத இடங்களில் தட்கல் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படுகின்றன. 

இந்த நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரிமீயம் தட்கல் திட்டத்திற்கு, தட்கல் டிக்கெட்டுகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்கூட்டியே அறிவித்தால் ரயில் பயணிகள் இடையே கடும் எதிர்ப்பு எழும் என்ற எண்ணத்தில் முன்னறிவிப்பின்றி முக்கிய ரயில்களில் பிரிமியம் தட்கல் திட்டத்தை ரயில்வே அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts: