05 08 2021
2019 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை, ஜம்மு -காஷ்மீர் நிர்வாகம் 1,200 க்கும் மேற்பட்ட வழக்குகளில் 2,300 க்கும் மேற்பட்டோர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில், பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் 954 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில், UAPA -வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 46 சதவீதம் பேர் மற்றும் PSA -வில் கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் இன்னும் ஜம்மு -காஷ்மீர் உள்ளேயும் வெளியேயும் சிறையில் உள்ளனர்.
காவல்துறை தரவுகளின்படி, 2019ஆம் ஆண்டு 699 பேர் PSAவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2020ஆம் ஆண்டு 160 பேர் கைது செய்யப்பட்டனர். 2021ஆம் ஆண்டு PSAவின் கீழ் 95 பேர் ஜூலை இறுதி வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 284 பேர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட முதல் 30 நாட்களில், முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முஃப்தி உட்பட குறைந்தது 290 பேர் மீது PSA இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்களில் குறைந்தது 250 பேர் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
UAPA இன் கீழ் கைது செய்யப்பட்ட 2,364 பேரில், 2019 இல் 437 வழக்குகளில் 918 பேரும், 2020 ல் 557 வழக்குகளில் 953 பேரும், இந்த ஆண்டு ஜூலை இறுதி வரை 275 வழக்குகளில் 493 பேரும் (காஷ்மீரில் 249 வழக்குகள், ஜம்முவில் 26 பேர்) கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 1,100 பேர் தொடர்ந்து காவலில் உள்ளனர்.
2020ஆம் ஆண்டு PSA வழக்குகளின் எண்ணிக்கை குறைந்தாலும், UAPA வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஒரு சட்ட நிபுணர் கூறுகையில், “PSAவுக்கு பதிலாக தனிநபர்கள் மீது மிகவும் கடுமையான சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது அவர்களின் காவலை நீட்டிப்பதற்காகதான்” என கூறினார்.
இதற்கிடையில், 2019 ஆம் ஆண்டில் CrPC பிரிவு 107 இன் கீழ் 5,500 க்கும் மேற்பட்டோர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக உள்துறை துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லியில் ஜூன் 24 ஆம் தேதி பிரதமர் மோடியை ஜம்மு-காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது நம்பிக்கையை வளர்க்கும் விதமாக இந்த கடுமையான சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய மக்கள் ஜனநாயக கட்சி செய்தித் தொடர்பாளர் சுஹைல் புகாரி கூறுகையில், “ஒருபுறம், ஜம்மு-காஷ்மீரில் ஒரு பெரிய மாற்றத்தை சித்தரிக்க முயற்சி நடக்கிறது. அதே நேரத்தில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மறுபுறம்,மத்திய அரசு பாராளுமன்றத்தில் ஜம்முவில் இயல்புநிலை திரும்புவதாக கூறுகிறது. இந்த இரு சூழ்நிலைகளில் ஒன்று மட்டுமே உண்மையாக இருக்க முடியும். ” என்றார்.
தேசிய மாநாட்டின் மாகாண தலைவர் நசீர் அஸ்லம் வானி கூறுகையில் “இந்த கைதிகளை விடுவிப்பது அல்லது மாநிலத்திற்கு வெளியே உள்ளவர்களை ஜம்மு-காஷ்மீருக்குள் மாற்றுவது பற்றி பரிசீலிக்க வேண்டும். இதனால் அவர்களின் குடும்பங்கள் குறைந்தபட்சம் அவர்களை சந்திக்க முடியும்” என்று கூறினார்.
சஜத் லோனேவின் மக்கள் மாநாட்டு கட்சியும் கடுமையான சட்டங்களின் கீழ் காஷ்மீரில் ஏராளமானோர் தடுத்து வைக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் அத்நான் அஷ்ரஃப் கூறுகையில், “காஷ்மீரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பள்ளத்தாக்கில் உள்ள பாதுகாப்பு சூழ்நிலையில் மாற்றம் இல்லாத தன்மையின் கொடூரமான நினைவூட்டலாகும். மேம்பட்ட சட்டம் -ஒழுங்கு நிலைமை குறித்து மத்திய அரசு கூறி வருவதற்கு மாறாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் UAPA மற்றும் PSA- ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை கவலையளிப்பதாக உள்ளது” என கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாறிய இரண்டாம் ஆண்டு விழாவில், நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் அமைதியை நோக்கி பயணிப்பதாகவும், நிலைமையை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசு திட்டங்களின் விரிவாக்கம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காஷ்மீரில் 15 லட்சத்திற்கும் அதிகமானது உட்பட 41.05 லட்சம் குடியிருப்பு சான்றிதழ்கள் ஜம்மு-காஷ்மீரில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஜம்மு&காஷ்மீரில் வசிக்கும் மேற்கு பாகிஸ்தான் அகதிகளுக்கு 55,931 சான்றிதழ்களும், வால்மீகி சமுதாயத்திற்கு 2,754 சான்றிதழ்களும், கோர்காக்களுக்கு 789 சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/jammu-kashmir-2300-people-booked-uapa-from-2019-329414/