14 08 2021 “தமிழ்நாடு அரசின் சார்பில் வேளாண்துறைக்கென தனியானதொரு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டிருப்பது வரவேற்பிற்குரியது. நிதிநிலை அறிக்கையில் பயிர்வாரியாக பல்வேறு புதிய முன்மொழிவுகள் இடம் பெற்றுள்ளதோடு அவற்றை அமலாக்குவதற்கான நிதி ஒதுக்கீடும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தற்போது உள்ள பாசன நிலங்களை விட கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி அதிகரிக்கப்படும் எனவும், தற்போதுள்ள சாகுபடியின் விகிதத்தை 60 சதவிகிதத்தில் இருந்து 75 சதவிகிதமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதும், மேலும் தற்போது உள்ள 10 லட்சம் ஹெக்டேர் இருபோக சாகுபடி நிலங்களை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருப்பதும் நல்லதொரு அம்சமாகும். பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள விவசாய நிலப்பரப்பில் சுமார் 45 சதவிகித நிலங்களுக்கு போதுமான பாசன நீர் கிடைப்பதில்லை எனும் நிலையே உள்ளது. இந்நிலையில் பாசன நிலங்களுக்கு தேவையான தண்ணீர் ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசன வசதி உருவாக்கப்படும் என அறிவித்திருப்பதும் தமிழ்நாட்டில் விவசாய அபிவிருத்திக்கு உதவுவதாகவும் அமையும்.
வேலை வாய்ப்பிற்காக கணினியை மட்டுமே பெரும்பாலும் நம்புகிற இளைஞர்களை கழனியை நோக்கியும் திருப்புகிற முயற்சியாக இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கக் கூடிய அதே நேரத்தில் விவசாயத்தொழிலை மட்டுமே நம்பி அதில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான விவசாயத்தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான திட்டங்களையும் உள்ளடக்கியதாக இந்நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. விவசாயத் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளது.
source https://news7tamil.live/cpm-welcome-to-agriculture-budget.html