அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தது என்பது அதிமுகவுக்கு பேரிழப்பாகும். அவைத் தலைவர் மதுசூதனன் அடைந்ததைத் தொடர்ந்து, அதிமுகவில் அடுத்த அவைத் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவின் இரட்டைத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தங்களுடைய ஆதரவாளர்களை அதிமுகவின் அவைத் தலைவர் பதவிக்கு கொண்டுவர முயல்வதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இருந்தபோது, அவருடைய ஆதரவுடன் பிப்ரவரி 5, 2007ல் நடைபெற்ற அத்முக பொதுக்குழு கூட்டத்தில் மதுசூதனன் அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவில் பொதுச் செயலாளருக்கு அடுத்து மிக முக்கியமான பொறுப்பு ஆகும்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர். இருவருமே கட்சியில் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று முயற்சிப்பது பல விஷயங்களில் வெளிப்படையாக தெரிந்தது.
எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் தன்னை முதல்வராகவும் கட்சி தலைமையாகவும் நிரூபித்துள்ளார். அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவில் தனது பிடியை வலியுறுத்தியபடியே இருந்து வருகிறார்.
தேர்தலுக்கு பிறகு, சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, கொறடா உள்ளிட்ட பதவிகளை தனது ஆதரவாளர்களுக்கே அளிக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்றார்.
இந்த சூழ்நிலையில்தான், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மதுசூதனன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுசூதனன் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு என்பதால் அதிமுக தொண்டர்களும் இரட்டை தலைமையும் அதிர்ச்சியில் இருந்தாலும் அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் யார் என்ற கெள்விகள் எழுந்துள்ளன.
அதிமுக அவைத் தலைவர் பதவிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளரையும் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளரையும் கொண்டுவர முயசிப்பார்கள் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் பதவிக்கு நத்தம் விஸ்வநாதன் கொண்டுவர முயற்சிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் அடுத்த அவைத் தலைவராக முன்னள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அல்லது செங்கோட்டையனை கொண்டுவர முயற்சிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, கட்சியில் தனது பிடியை உறுதிசெய்துள்ள இபிஎஸ், புதிய அவைத் தலைவர் நியமனத்திலும் உறுதி செய்வார் என்று வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. விரைவில் அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக அவைத் தலைவர் தேர்வும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், யாருடைய கை உயரும் என்பது விரைவில் தெரியவரும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/who-is-next-presidium-chairman-of-aiadmk-ops-eps-choices-329682/