07 08 2021
Tamil News Update : விஏஒ அலவலகத்தில் பணியாற்றி வரும் உதவியாளரை அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மிரட்டி தனது காலில் விழ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒற்றர்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகத்தில் கலைச்செல்வி என்பவர் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வருகிறார். அவருக்கு உதவியாளராக அதே பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்த்த முத்துசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்கள். அந்த கிராமத்தின் சுற்றுவட்டாரப்பகுதியை சேர்த்த பொதுமக்கள் தங்களது நிலம் ஆவணங்கள் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து வருகினறனர்.
அந்த வகையில் நேற்று காலை கோபிராசிபுரம் பகுதியை சேர்த்த கோபிநாத் என்பவர் தனது சொத்து ஆவணங்களை சரிபார்ப்பதற்காக வி.ஏ.ஓ. அலுவலகத்தில் வி.ஏ.ஓ. கலைச்செல்வியை சந்தித்து தனது சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை கொடுத்துள்ளார். இதனை சரிப்பார்த்த விஏஓ கலைச்செல்வி, இந்த ஆவணங்கள் சரியானதாக இல்லை என்றும், உரிய ஆவணங்களை கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் கோபிநாத் அங்கிருந்து செல்லாமல், அலுவலரை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
இதனை பார்த்த உதவியாளர் முத்துச்சாமி, ஒரு உயர் அதிகாரியை இப்படி தகாத வார்த்தைகளால் திட்டுவது சரியல்ல. அவர்கள் சொல்லும் சரியான ஆவணங்களை நீங்கள் எடுத்து வாருங்கள் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபிநாத், முத்துச்சாமியை மிரட்டும் வகையில், என்னை எதிர்த்து பேசுகிறாயா, நான் நினைத்தால் உன்னை வேலையை தூக்கி விட முடியும். இந்த ஊரிலும் நீ வாழ முடியாது என கூறியுள்ளார். மேலும் அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், நீ என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன முத்துசாமியும் வேறு வழியின்றி கோபிநாத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வி.ஏ.ஓ. கலைச்செல்வி மற்றும் ஊழியர்கள் முத்துச்சாமியை தடுத்தும், அவர் மீண்டும் மீண்டும் கோபிநாத்தின் காலில் விழுந்துள்ளார். மேலும் கோபிநாத் முத்துசாமியின் சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை வீடியோ எடுத்த அங்கிருந்த ஊழியர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கை வந்த பின்னர் சம்மந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக பல தரப்பினலும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-the-assistant-fall-on-his-feet-in-vao-office-in-covai-330181/