06 08 2021
தமிழகத்தில் வியாழக்கிழமை புதிதாக ஆயிரத்து 997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 943 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 20,117 ஆக உயர்ந்துள்ளது. திருப்பூரில் 5 பேர், சென்னையில் 4 பேர், சேலத்தில் 4பேர், கோயம்புத்தூரில் 3பேர், தஞ்சாவூரில் 3பேர் உட்பட ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். 22 மாவட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகவில்லை.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 226ஆக இருந்த கொரோனா பாதிப்பு வியாழக்கிழமை 220ஆக குறைந்தது. சென்னையில் புதன்கிழமை 189 ஆக இருந்த கொரோனா பாதிப்பு வியாழக்கிழமை 196 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. அந்த மாவட்டத்தில் புதன்கிழமை 37 ஆக இருந்த பாதிப்பு வியாழக்கிழமை 64 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனைகளை அதிகப்படுத்தியுள்ளோம். தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்புகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். சராசரியாக தினசரி பாதிப்பு 1,700 ஆக உள்ளது. ஒவ்வொரு நாளும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பது ஆபத்து நிறைந்தது என அனைத்து மாவட்டங்களுக்கும் தெரிவித்துள்ளோம். சுகாதார பணியாளர்கள் தங்கள் பணிகளை தொடர வேண்டும்” என கூறினார்.
கொரோனா பாதிப்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு இல்லை. தஞ்சை மாவட்டத்தில் தான் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகபட்சமாக 2.8% ஆக உள்ளது. அதேபோல அரியலூர் (2.6%) கோவை (2.0%), மயிலாடுதுறை (2.2%), புதுக்கோட்டை (2.2%) மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் 2ஐ கடந்துள்ளது. இருப்பினும், இதர மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதால் ஒட்டுமொத்த பாதிப்பு விகிதம் 1.2% ஆகக் குறைந்துள்ளது.
(R Value என்பது, ஒரு நபர் எத்தனை பேருக்கு தொற்றை பரப்புகிறார் என்பதன் விகிதமாகும். R Value மதிப்பு 1 க்கு மேல் இருந்தால், ஒரு பாதிக்கப்பட்ட நபர் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தொற்றுநோயை பரப்புகிறார் என்று அர்த்தம்)
கொரோனா பரவல் விகிதத்தை குறிக்கும் R Value தமிழகத்தில் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறைந்தது 18 மாவட்டங்களில் R Value எண்ணிக்கை 1 ஆக உள்ளது. திருவாரூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக R Value 1.3 ஆகவும், சென்னையில் 1.2 ஆகவும் உள்ளது. குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 0.78 ஆகவும், திருநெல்வேலியில் 0.8 ஆகவும் உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது 3வது அலையின் தொடக்கம்தானா என்பதை உறுதி செய்வதற்கு முன்னே R-Value அதிகரிப்பது கவலைக்குரியது என தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
வியாழக்கிழமை 2.9லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனால் மாநிலத்தில் மொத்தமாக கொரேனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 2.2 கோடியை கடந்துள்ளது.
புதன்கிழமை வரை, 1.8 கோடி பேர் முதல் டோஸையும், 42.7 லட்சம் பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர். 18-44 வயதுடைய 22% பேர், 31% முதியவர்கள் மற்றும் 45-59 வயதுடைய 45% பேர் குறைந்தது ஒரு டோஸ் பெற்றுள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-corona-positivity-rate-r-value-increases-329753/