செவ்வாய், 4 ஜனவரி, 2022

இம்யூனிட்டி அதிகரிக்க… செலவே இல்லாமல் ஈசி ரசம்: இப்படி ட்ரை பண்ணுங்க!

  உடலுக்கு பல அற்புத நன்மைகளை அள்ளித்தரும் உணவுகளில் ரசம் முக்கிய இடம்பிடிக்கிறது. இந்த அற்புத ரசத்தில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் நமக்கு ஏராளமான பலன்களைத் தருகின்றன. ஜலதோஷம் முதல் காய்ச்சல் வரை அனைத்து பொதுவான நோய்களுக்கும் ஒரு பொதுமருந்தாகவும் ரசம் உள்ளது.

மேலும், நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவதோடு, வாயு தொல்லை, வயிறு உபாதைகளுக்கு தீர்வு தருகிறது. இவற்றில் சேர்க்கப்படும் பொருட்களான கருப்பு மிளகு, பெருங்காயம், மஞ்சள் மற்றும் கறிவேப்பிலை பூஞ்சை நோய்களை அண்டவிடாமல் தடுக்கிறது.

கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடும் இந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி ஒரு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. எனவே, ரசத்தை நமது உணவுகளுடன் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. அப்படி நீங்கள் சேர்த்துக் கொள்ளவேண்டிய சில வகை ரசங்களை இங்கு பரிந்துரை செய்துள்ளோம். அவற்றை இப்போது ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கலாம்.

வேப்பம் பூ ரசம் – NEEM FLOWER RASAM / Veppam Poo Rasam

இந்தியாவின் பல பகுதிகளில் வேப்ப மரங்கள் பொதுவானவை. இந்த ரசம் வேப்பப் பூக்களை உள்ளடக்கியது, அவை எளிதில் பெறலாம். வேப்பம் பூக்கள் அவற்றின் செரிமான பண்புகள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களுக்கு அறியப்படுகின்றன.

வேப்பம் பூ ரசம்

வேப்பம் பூ ரசம் செய்யத் தேவையான பொருட்கள்:

நெய் – 1 டீஸ்பூன் / 5 கிராம் (வறுக்க)
சிவப்பு மிளகாய் – 4 (வறுக்க)
புளி – 30 கிராம் (1.5 கப் / 300 மிலி வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்தது)
பெருங்காய தூள் – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 15
உப்பு – தேவையான அளவு
துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் – 2 கப் / 400 மிலி

வெல்லம் – 1 டீஸ்பூன் / 5 கிராம்
நெய் – 1 டீஸ்பூன் / 5 கிராம்
காய்ந்த வேப்பம் பூ – 2 டீஸ்பூன் / 10 கிராம்

தாளிக்க…
நெய் – 1 டீஸ்பூன் / 5 கிராம்
கடுகு
கருவேப்பிலை – 8
கொத்தமல்லி தழை – 1 டீஸ்பூன் / 10 கிராம் (நறுக்கியது – அலங்கரிக்க)

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் நெய் சேர்த்து சூடானதும், சிவப்பு மிளகாய் சேர்த்து நிறம் மாறத் தொடங்கும் வரை வறுக்கவும்.

இதனுடன் புளி சாறு, பெருங்காயம், மஞ்சள்தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து, புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

கொதிக்கும் புளி கலவையில் பருப்பு தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து, தனலை குறைத்து, ரசம் நுரை வரும் வரை சூடேற்றவும். பின்னர் அடுப்பில் இருந்து அகற்றி தனியாக மூடி வைக்கவும்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் நெய் சேர்த்து சூடானதும், வேப்பம்பூவை பொன்னிறமாக வறுக்கவும். இதை ரசத்தில் சேர்க்கவும்.

இதன்பிறகு ஒரு தனி கடாயில் நெய்யை சூடாக்கி பின்னர், கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ரசத்தில் நன்கு கலந்து சேர்க்கவும்.

பிறகு நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து, சாதத்துடன் சூடாகப் பரிமாறி ருசிக்கவும்.

வேப்பம் பூ ரசம்

நெல்லிக்காய் ரசம் – GOOSEBERRY RASAM / USIRIKAYA RASAM

இந்த கசப்பான மற்றும் சுவையான ரசம் ஆந்திரா ஸ்டைலில் தயார் செய்யப்படுவது ஆகும். இவற்றில் வைட்டமின்-சி மிகுந்து காணப்படுகிறது. இது உங்களுக்கு உடலுக்கு கொரோனா போன்ற தொற்றுகளில் இருந்து கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் என்று பல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நெல்லிக்காய் ரசம்

இந்த நெல்லிக்காய் ரசம் ஜலதோஷத்தை எதிர்த்துப் போராடும் ஒரு சிறந்த தீர்வாகும். இவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் துவர்ப்பு பண்புகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

நெல்லிக்காய் ரசம் செய்யத் தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 1 கப் / 200 கிராம் (புளிப்பு நெல்லிக்காய்)
தக்காளி – 2 / 100 கிராம் (நறுக்கியது)
வெல்லம் – 1/4 கப் / 50 கிராம் (பொடித்தது)
கொத்தமல்லி விதைகள் – 1 டேபிள்ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – கருப்பு மிளகுத்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க…
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 20
கொத்தமல்லி தழைகள் (நறுக்கியது 15)

நெல்லிக்காய் ரசம் செய்முறை:

முதலில் ஒரு கடாயில் சிவப்பு மிளகாய் மற்றும் துவரம் பருப்பு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

இவை நன்றாக ஆறிய பின்னர், இவற்றுடன் கொத்தமல்லி விதை, மிளகுத்தூள், சீரகம் ஆகியவற்றைக் கலந்து நொறுநொறுப்பாக அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரம் எடுத்து அதில் தண்ணீர் (750 மில்லி) ஊற்றி தக்காளி மற்றும் நெல்லிக்காயை மென்மையாகும் வரை வேக வைக்கவும். அவை நன்றாக ஆறிய பிறகு அவற்றை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பின்னர், வடிகட்டிய நெல்லிக்காய் மற்றும் தக்காளி சாற்றில் அரைத்த மசாலா கலவையை சேர்க்கவும்.

மஞ்சள் தூள் மற்றும் வெல்லம் சேர்த்து, நன்கு கலந்து கொதிக்க வைத்து, இளங்கொதிவாக்கவும்.

பின்னர் எண்ணெயை சூடாக்கி, கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும், கடுகு வெடிக்கத் தொடங்கும் போது, ​​ரசத்தை ஊற்றவும்.

பிறகு மசாலாவை சரிபார்க்கவும். கொத்தமல்லி தழைகளால் அலங்கரித்து பரிமாறி ருசிக்கவும்.

நெல்லிக்காய் ரசம்

இஞ்சி – எலுமிச்சை ரசம் – GINGER AND LEMON RASAM

இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும், எலுமிச்சையில் வைட்டமின் சி ஏராளமாக நிரம்பிய ஒன்றாகவும் உள்ளது.

இஞ்சி – எலுமிச்சை ரசம்

இஞ்சி – எலுமிச்சை ரசம் செய்யத் தேவையான பொருட்கள்:

புளி – 1 நெல்லிக்காய் அளவுள்ளது
தக்காளி – 2 – 3 சிறியது (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (சிறிதாக நறுக்கியது)
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
வெல்லம் – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1-2 பெரிய துண்டுகள் (பொடியாக நசுக்கியது)
துவரம் பருப்பு – 2 கப்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு: 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
ரசம் பொடி- 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எலுமிச்சம்பழம் – 1 (சிறிய எலுமிச்சை சாறு)

இஞ்சி – எலுமிச்சை ரசம் செய்முறை

முதலில் புளியை எடுத்து அவற்றை வெதுவெதுப்பான நீரில் சுமார் 20 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு வடிகட்டவும்.

பின்னர், துவரம் பருப்பை (சுமார் 15 நிமிடங்கள்) மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

இப்போது, ஒரு பாத்திரம் எடுத்து அதில் புளித் தண்ணீர் சேர்க்கவும். அவற்றுடன் இஞ்சியை சேர்த்து கொதிக்க விடவும்.

தொடர்ந்து தக்காளி, பச்சை மிளகாய், வெல்லம், உப்பு மற்றும் ரசம் தூள் சேர்க்கவும்.

பின்னர் முன்பு வேக வைத்த பருப்பை மசித்து, புளி தண்ணீரில் சேர்க்கவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

இதன்பிறகு சீரகம், மிளகுத்தூளை அரைத்து, ரசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது சேர்க்கவும்.

பின்னர், கடுகு மற்றும் கறிவேப்பிலையை நெய்யில் தாளித்து ரசத்தில் சேர்க்கவும். தீயை அணைத்தவுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

ரசம் முடிந்ததும் கொத்தமல்லி தழையை தூவி, பரிமாறும் முன் ஒரு சில நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.

அதன்பிறகு, பரிமாறி ருசித்து மகிழலாம்.


source https://tamil.indianexpress.com/lifestyle/rasam-recipes-in-tamil-these-3-rasam-recipes-will-boost-your-immunity-391965/