எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2021ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு எடுத்திருந்தது. அரசுக்கு சொந்தமான சொத்துக்களை தனியார் மயம் ஆக்குவதா என இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இருப்பினும் இது பற்றி பிப்ரவரி 1ம் தேதி நடைபெற்ற நடப்பு நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடரிலும் எதுவும் ஆலோசிக்கப்படவில்லை.
இதனால் கடும் பொருளாதார இழப்பும், வேலையின்மையும் உண்டாகும் என பலரும் விவாதித்து கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்ஐசி பங்குகளை விற்கும் எண்ணத்தை திரும்ப பெற கோரி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், எல்.ஐ.சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் முடிவு சந்தேகத்திற்கு இடமின்றி தனியார்மயத்தை நோக்கி நகரும் விரும்பத்தகாத செயல் என தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக கோடிக்கணக்கான இந்தியர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற எல்ஐசி, அதன் திறமையான செயல்பாட்டின் மூலம் சமூகப் பாதுகாப்பை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு சிறந்த அரசாங்கம் விற்பனையில் ஈடுபடுவதற்குப் பதிலாக நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், பங்குகளை விற்கும் தவறான முடிவை திரும்பப் பெற்று, LIC-ஐ என்றென்றும் காப்பாற்றுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/central-should-not-sell-lic-shares-to-private-cm-stalin-urge.html