5 7 2022
மத மோதலை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் மோடி அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாவட்ட
மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சிறப்பு
விருந்தினராகப் பங்கேற்றார். பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டில் மக்களுடைய பிரச்சனை ஏராளமாக புதர்போல் மண்டிக் கிடக்கிறது. குறிப்பாக விலைவாசி என்றைக்கும் இல்லாத அளவிற்கு பன்மடங்கு அதிகரித்து மக்களுடைய
வாழ்க்கை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. விலைவாசி அதிகரிக்கிறது. அதே
நேரத்தில் வருமானம் என்பது இருந்த நிலையிலேயே இருக்கிறது அல்லது குறைவாக
இருக்கிறது. வேலை இன்மை பிரச்சனையும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்று உறுதி அளித்தார். இதுவரை 14 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால், கொடுக்கவில்லை. கொடுக்காதது மட்டுமல்ல அரசு பின்பற்றுகின்ற தவறான கொள்கைகளின் காரணமாக வேலையில் இருப்பவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். வேலையில் இருப்பவர்கள் லட்சக்கணக்கான பேர் வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள். புதிதாக வேலைக்குச் சேர்த்தால் நிரந்தரமற்ற தற்காலிக பணியாளர்களாகதான் வேலைக்கு சேர்க்கிறார்கள். எந்தவிதமான வாழ்க்கைக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை நீடிக்கிறது.
அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிப்பது மட்டுமின்றி பாஜக ஒரு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. எல்லோரும் இந்தத் திட்டத்தை வன்மையாக எதிர்த்து வருகிறார்கள். எனவே, இத்திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும். மதரீதியான மோதலை உருவாக்குவதில் ஆர்.எஸ்.எஸ்.உம் சரி பாஜகவும் சரி தீவிரமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதன் ஒரு பகுதி தான் நபிகள் நாயகம் குறித்து மிக இழிவான முறையில் அந்த கட்சியினுடைய செய்தி தொடர்பாளர் பேசியுள்ளார். இச்செயல் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் கடும்
கண்டனத்துக்கு உரியதாக பேசப்பட்டு வருகிறது. மத மோதலை உருவாக்கி மக்களை
பிளவுபடுத்தி அதன் மூலமாக தங்களுடைய குறுகிய அரசியல் ஆதாயத்தை பெறுவதற்காக அற்பத்தனமான நடவடிக்கையில் மோடி அரசாங்கம் ஈடுபட்டு இருக்கிறது.
இதன் காரணமாகத்தான் இந்த அரசு நீடிக்கக் கூடாது. இது நாட்டிற்கு நல்லதல்ல. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு நல்லதல்ல. எனவே மத்திய அரசு பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. நாங்கள் கூறுவது ஒரே நாடு மற்றதெல்லாம் ஒன்று ஒன்று என்று சொல்கின்ற நீங்கள் ஒரே நாடு மக்களுக்கான வாழ்க்கையும் ஒரே வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கடுமையான ஏற்றத்தாழ்வு இருக்கிறது அதனை அகற்ற வேண்டும் என்று தான் நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம். இதற்கு இசைவாக மத்திய அரசாங்கம் இல்லை. இது கார்ப்பரேட் முதலாளிகளை ஆதரிக்கின்ற அரசாக செயல்படுகிறது. எங்களுடைய மாநில மாநாடு ஆகஸ்ட் 6 ஆம் தேதி திருப்பூரில் நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டில் அரசியல் விளக்கமாக மக்கள் விரோத ஜனநாயக விரோத சர்வதிகார பாசிச மோடி அரசே வெளியேறு என்ற முழக்கத்தை முன்வைக்க இருக்கின்றோம்.
பாஜக தமிழ்நாடு மட்டுமன்றி இந்த நாட்டையே நான்கு கூறாக பிரிப்பதற்கு ஏற்பாடு
செய்து கொண்டிருக்கிறார்கள். நாடு கூறுகளாக பிரித்து எறியப்பட வேண்டும் என்ற
நோக்கில் மத ஜாதி ரீதியாக பிரித்து குறுகிய நோக்கத்துடன் பா.ஜ.க அரசு
செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். காவேரி மேலாண்மை ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை. ஒரு மாநில சார்பு நிலையை மேற்கொள்கிறது. கர்நாடகாவிற்கு ஆதரவான நிலையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அது தவறு ஏனென்றால் இது ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்பு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட குழு இது. இந்த குழு பாரபட்சமற்ற முறையில் செயல்பட வேண்டும் என்றார்.
-ம.பவித்ரா
source https://news7tamil.live/cpi-state-secretary-mutharasan-slams-modi-govt.html