15 07 2022
நாடாளுமன்றத்தில் வார்த்தைகள் தடை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 18ம் தேதி கூட உள்ளது. இதையொட்டி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எந்த வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்பதற்கான புத்தகத்தை மக்களவைச் செயலகம் வெளியிட்டிருந்தது. அதில் ஊழல், கோழை, சர்வாதிகாரி, வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், நாடகம், திறமையற்றவர், இரட்டை வேடம், தவறான வழிநடத்துதல் உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று கூறப்பட்டது. இது நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதற்கு விளக்கமளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “அந்த வார்தைகள் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைவராலும் பயன்படுத்தப்பட்டவை. அவை நீக்கப்பட்டிருக்கின்றனவே தவிர, எந்த வார்த்தைகளும் தடை செய்யப்படவில்லை.” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் ப சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில், “நாடாளுமன்றம் எந்த வார்த்தையையும் தடை செய்யவில்லை. வரையறுக்கப்பட்ட உங்கள் சொல் அதிகாரத்தை விரிவாக்கம் செய்யத்தான் நாடாளுமன்றம் முயற்சிக்கிறது. இதற்கு வெட்கப்பட வேண்டாம். மாறாக அரசாங்கத்தின் நடத்தையால் நொந்து போயிருக்கிறோம் என்று சொல்வோம். அரசாங்கம் ஊழல் செய்துவிட்டது என்று சொல்ல வேண்டாம். மாறாக அவர்கள் மக்களின் பணத்தை திருடிவிட்டனர் என்று சொல்வோம். அரசாங்கம் நாடகத்தை அரங்கேற்றுகிறது என்று குற்றம் சாட்ட வேண்டாம். அரசாங்கம் மேடையில் விளையாடுகிறது என்று சொல்வோம்.
அரசாங்கம் நடத்தும் பணியை சபாநாயகர் மற்றும் தலைவரிடம் விட்டுவிடலாம். அவர்களிடம் நொந்துபோனார், திருடிவிட்டனர், விளையாட்டு போன்ற வார்த்தைகளை தடை செய்ய பிச்சை எடுப்போம்.” என்று விமர்சித்திருக்கிறார். ப.சிதம்பரம் தன் மற்றொரு பதிவில், “அரசாங்கம் தகுதியற்றதாக இருக்கும்பாது, அதை மக்கள் மன்றத்தில் பயன்படுத்தத் தகுதியற்ற அரசாங்கம் என்று விவரிப்பது சரியாக இருக்குமா. விசாரணை அமைப்புகள் சட்டங்களை அதிகார துஷ்பிரயோகம் செய்யும்போது, மக்கள் மன்றத்தில் பயன்படுத்தத் தகுதியற்ற அவர்களின் நடத்தை குறித்து, குற்றம்சாட்டி கமிட்டி முன்பு இழுத்து சென்று சலுகைகள் பெற்று தரலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-ம.பவித்ரா
source https://news7tamil.live/parliment-only-trying-to-expand-your-limited-vocabulary-chdhambaram.html