காமராஜரின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அவரின் ஆட்சிக்காலத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
தமிழ்நாட்டில் 3 முறை முதலமைச்சராக அரியணை ஏறிய காமராஜரின் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மக்களுக்காகத் தொண்டு செய்வதையே தனது வாழ்நாள் கொள்கையாகக் கடைப்பிடித்த காமராஜர், 1953-ஆம் ஆண்டு முதல்முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். முதல் பணியாக, ராஜாஜி ஆட்சியில் கொண்டுவரப்பட்டு மக்களின் எதிர்ப்பை சந்தித்த, குலக்கல்வி திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார் முதலமைச்சர் காமராஜர். ராஜாஜியால் மூடப்பட்ட 6 ஆயிரம் பள்ளிகளை மீண்டும் திறந்து ஏழைக் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க வழிவகுத்து மக்களின் இதயங்களில் இடம்பிடித்தார்.
காமராஜரின் முதல் ஐந்தாண்டு ஆட்சியில், 4,267 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டு, 6,076 படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குப் பணி வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி மகத்தான முதலமைச்சராக வரலாற்றில் தடம் பதித்தார். தாழ்த்தப்பட்டோர் குழந்தைகளுக்கு மட்டுமே இலவசக் கல்வி என்றிருந்த நிலையை மாற்றி, பிற சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளும் இலவசமாய் தொடக்கக் கல்வி கற்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. கல்லூரிகளில் முதல்முறையாகத் தமிழ் வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. IIT கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. கல்வித்துறையில் காமராஜரின் சீரிய திட்டத்தால், 1957-ல் இருந்த 15,800 தொடக்கப் பள்ளிகள், 1962ல் 29000 ஆக உயர்ந்தன. 1955 -ல் 814 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை, 1962ல் 1,996 ஆக உயர்ந்தது.
சென்னை பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, ஆவடியில் பீரங்கி தொழிற்சாலை, அனல்மின் நிலையம் உள்ளிட்டவை காமராஜர் ஆட்சிக் காலத்தில் தான் அமைக்கப்பட்டன. ஆவடி கனரக வாகன தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம், மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் ஆகியவை காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டன.
திருச்சியில் பாரத் மிகுமின் நிறுவனம் ( பெல் ), துப்பாக்கித் தொழிற்சாலை நிறுவப்பட்டன. நீலகிரியில் கச்சாபிலிம் தொழிற்சாலையும் அமைக்கப்பட்டது.

அனல்மின் நிலைய மின் உற்பத்திக்கான மூலப்பொருளான நிலக்கரி எடுக்க, காமராஜர் ஆட்சிக் காலத்தில் நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டது. காமராஜர் ஆட்சிக்கு முன் மூன்றாக இருந்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை, இவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், 8 ஆக உயர்த்தப்பட்டது. தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், நாட்டிலேயே தொழில்துறை வளர்ச்சியில் 2வது இடத்தை பிடித்தது தமிழ்நாடு.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுவதுடன், நீர் மின்சாரமும் உற்பத்தி செய்யப் படுகிறது. கீழ் பவானி, காவிரி டெல்டா, ஆரணியாறு, வைகை நீர்த்தேக்கம், அமராவதி, சாத்தனூர், பரம்பிக்குளம், நொய்யாறு, ஆரணியாறு, கிருஷ்ணகிரி ஆழியாறு, வீடூர் அணைகள் காமராஜரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டன.
பெரியாறு அணையிலிருந்து பிரிக்கப்படும் கூடுதல் நீரை பாதுகாப்பாக இணைத்து வைகை நதியின் குறுக்கே, காமராஜர் ஆட்சியில் அணை கட்டப்பட்டது. சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுவதற்காக மேட்டூர் அணையிலிருந்து வாய்க்கால் அமைக்கப்பட்டது.
காமராஜரால் அமைக்கப்பட்டு, 50 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக நிற்கும் அணைகளால் தமிழ்நாட்டின் பல பகுதிகளின் குடிநீர், விவசாயத் தேவை இன்றளவும் பூர்த்தி செய்கிறது. இப்படி, மக்கள் நலன் பயக்கும் எண்ணற்ற திட்டங்களால் என்றும் நிலைத்து நிற்கிறார் காமராஜர்.
source https://news7tamil.live/kamaraj-birthday-party-what-are-the-features-of-his-reign.html