10 07 2023
வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இதுவரை சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், குஜராத், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
மின்சார சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தலைநகர் டெல்லியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாண்டோ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சிம்லாவில் பெய்த கனமழையால் 3 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதேபோல், மண்டி மாவட்டத்தில் பியாஸ் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் கரைபுரண்டோடுவதால் ஆற்றின் குறுக்கே பாஞ்சர் மற்றும் ஆவ்ட் இடையே கட்டப்பட்டிருந்த பாலம் நீரில் அடித்துச்செல்லப்பட்டது. ஆற்றில் கார் ஒன்று அடித்துச்செல்லப்பட்ட காட்சியும் வெளியாகி உள்ளது.
source https://news7tamil.live/heavy-rains-continue-in-northern-states-videos-depicting-the-disaster-have-gone-viral.html