இந்திய அளவில் மிக முக்கியமான வழக்காக பார்க்கப்பட்டு வந்த ‘லவ் ஜிகாத்’ தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் மிக முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் வைக்கத்தைச் சேர்ந்தவர் ஹதியா. இவர் இந்து குடும்பத்தில் பிறந்தவர். பின்னர், ஷபீன் ஜகான் என்கிற முஸ்லீம் இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் தன் பெயரை ஹதியா என மாற்றிக்கொண்டு இசுலாம் மதத்தை தழுவினார்.
இந்நிலையில், தனது மகளை ஏமாற்றி, மூளைச்சலவை செய்து சிரியா நாட்டின் தீவிரவாதக்குழுவான ஐ.எஸ் அமைப்போடு சேர்த்துவிட்டதாகவும், எனவே இதைக்குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் எனவும் கூறி ஹதியாவின் தந்தை வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்றம், ஹதியாவின் திருமணத்தை செல்லாது தெரிவித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, ஹதியாவின் கணவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ஐ.எஸ் தொடர்பு குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஜகான் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இதுகுறித்து விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு ஹதியா மூளைச்சலவை செய்யப்பட்டு ஐ.எஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதன் பிறகு, நீதிமன்றத்தில் ஆஜரான ஹதியா, தனது விருப்பத்திற்கு உட்பட்டுத்தான் திருமணம் நடந்ததாக தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், தேசிய புலனாய்வு விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
அப்போது ஆஜரான ஹதியாவின் தந்தையின் வழக்கறிஞர் ஹதியாவை திருமணம் செய்து அழைத்து வந்தது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த உச்சநீதிமன்றம், ஹதியா யாரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவள் தான் முடிவு செய்ய வேண்டும். தான் விருப்பப்பட்டே திருமணம் செய்ததாக அவள் சொல்கிறாள். 24வயதான ஹதியாவின் திருமணத்தை கேள்விகேட்க யாருக்கும் உரிமையில்லை. அப்பாவோடு செல்லமாட்டேன் என சொல்லும் ஹதியாவை, இல்லை நீ அப்பாவோடு தான் செல்லவேண்டும் என எப்படி சொல்லமுடியும்?என்று கேள்வியெழுப்பினர்.