/indian-express-tamil/media/media_files/2026/02/03/trump-modi-2026-02-03-08-30-57.webp)
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான பொருளாதார உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்தியப் பொருட்களின் மீதான பரஸ்பர இறக்குமதி வரியை (Reciprocal Tariff) 50%-லிருந்து 18%-ஆக குறைக்க அமெரிக்கா சம்மதித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த வர்த்தக பதற்றங்களுக்கு இந்த முடிவு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கா விதித்த 25% 'விடுதலை தின' (Liberation Day) வரிகள் மற்றும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்காக விதிக்கப்பட்ட கூடுதல் 25% வரி என மொத்தம் 50% ஆக இருந்த வரி, தற்போது 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரதமர் மோடியுடன் "வர்த்தகம், ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட பல விஷயங்கள்" குறித்து விவாதித்தேன். இந்த விவாதங்களின் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதாக ஏற்பட்டுள்ளது.
அதன்படி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக, இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து எரிசக்தி இறக்குமதியை அதிகரிக்க பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்தார். இதன் மூலம் இந்தியா சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் நிலக்கரி போன்ற பொருட்களை வாங்கவும், வர்த்தகத் தடைகளை நீக்கவும் உறுதியளித்துள்ளது.
'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு உந்துதல்அழுத்தம் கொடுக்கும் மோடி
அமெரிக்காவின் இந்த முடிவை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, இது 'மேக் இன் இந்தியா' (Make in India) திட்டத்திற்குப் மிகப்பெரிய பலத்தைத் தரும் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனது இனிய நண்பர் அதிபர் ட்ரம்ப்புடன் பேசியதில் மகிழ்ச்சி. இந்தியத் தயாரிப்புகளுக்கு (Made in India) 18% வரி குறைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 140 கோடி இந்திய மக்கள் சார்பாக அதிபர் ட்ரம்ப்பிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரு பெரும் ஜனநாயக நாடுகள் இணைந்து செயல்படுவது உலகிற்கே நன்மை பயக்கும். நமது கூட்டாண்மையை முன்னெப்போதும் இல்லாத உயரத்திற்கு கொண்டு செல்ல அவருடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அதிபர் ட்ரம்ப்பின் அறிக்கை
பிரதமர் மோடியை ஒரு "சக்திவாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர்" என்று புகழ்ந்த ட்ரம்ப், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதில் "நாங்கள் வர்த்தகம் மற்றும் உக்ரைன் போர் குறித்து விவாதித்தோம். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, உடனடி அமலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம். மோடியும் நானும் காரியங்களைச் சாதிப்பதில் வல்லவர்கள் (Get things done). இதன் மூலம் அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவு முன்னெப்போதையும் விட வலுவடையும்.
தற்போதைய வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா, ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவிலிருந்தும், வெனிசுலாவிலிருந்தும் இன்னும் பலவற்றை வாங்கவும் அவர் ஒப்புக்கொண்டார். இது உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும். போர் காரணமாக அங்கு ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதை காரணமாக, அவரது வேண்டுகோளின்படி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
இதன் மூலம் அமெரிக்கா குறைக்கப்பட்ட பரஸ்பர கட்டணத்தை வசூலிக்கும், அதை 25% இலிருந்து 18% ஆகக் குறைக்கும். அமெரிக்காவிற்கு எதிரான தங்கள் கட்டணங்கள் மற்றும் வரி அல்லாத தடைகளை பூஜ்ஜியமாகக் குறைக்க அவர்கள் முன்னேறுவார்கள். 500 பில்லியன் டாலர் அமெரிக்க எரிசக்திக்கு கூடுதலாக, மிக அதிக அளவில் 'அமெரிக்கா வாங்க' பிரதமர் உறுதியளித்தார். தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்கள் வாங்க இந்தியாவுடனான எங்கள் அற்புதமான உறவு எதிர்காலத்தில் இன்னும் வலுவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவுக்கான புதிதாக நியமிக்கப்பட்ட தூதர் செர்ஜியோ கோர், அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியதாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
எரிசக்தி துறையில் புதிய மாற்றம்
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா இனி ஈரான் அல்லது ரஷ்யாவிற்குப் பதிலாக வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/india/us-agrees-to-cut-reciprocal-tariff-on-india-to-11069159





