திங்கள், 2 பிப்ரவரி, 2026

பட்ஜெட் 2026: அமெரிக்க வரிச் சுமையை குறைக்க மத்திய பட்ஜெட்டில் 4 முக்கிய திட்டங்கள்

 

Union Budget 2026, India’s Response to US Tariffs: அமெரிக்கா விதித்துள்ள 50% கூடுதல் இறக்குமதி வரி, இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் வர்த்தக ஒப்பந்த சிக்கல்களால் இந்தியாவின் ஜவுளி உள்ளிட்ட தொழிலாளர் சார்ந்த துறைகள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. இந்த சூழலில் இருந்து இந்திய ஏற்றுமதியாளர்களைக் காக்க, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

1. சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு (SEZ) சலுகை

அமெரிக்க சந்தையை மட்டுமே நம்பியிருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் (SEZs) வேலை இழப்புகளைத் தடுக்க ஒரு சிறப்புக் கால சலுகையை அமைச்சர் அறிவித்துள்ளார். சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள உற்பத்தி அலகுகள், தாங்கள் தயாரிக்கும் பொருட்களை இந்தியாவிற்குள்ளேயே (DTA - Domestic Tariff Area) குறைந்த வரி விகிதத்தில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 466  சிறப்பு பொருளாதார மண்டல அலகுகள் மூடப்பட்டுள்ளன. தற்போதுள்ள 370  சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பணியாற்றும் 31 லட்சம் ஊழியர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

2. ஜவுளித் துறையை நவீனப்படுத்த ஒருங்கிணைந்த திட்டம்

அமெரிக்க வரி விதிப்பால் ஜவுளித் துறைக்கு ஏற்படும் நிரந்தரப் பாதிப்பைத் தடுக்க 'ஒருங்கிணைந்த ஜவுளி மேம்பாட்டுத் திட்டம்' (Integrated Programme) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய இழைத் திட்டம் (National Fibre Scheme)- பட்டு, கம்பளி, சணல் மற்றும் செயற்கை இழைகளில் சுயசார்பு அடைய இது உதவும். பாரம்பரிய ஜவுளித் தொகுப்புகளை (Clusters) நவீனப்படுத்த இயந்திரங்களுக்கான மூலதன உதவி மற்றும் பொதுவான தரப் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும். நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு நேரடி ஆதரவு வழங்க தேசிய கைத்தறி மற்றும் கைவினைத் திட்டம் வலுப்படுத்தப்படும்.

3. மீன்வளம் மற்றும் தோல் துறையில் வரி குறைப்பு

ஏற்றுமதிப் பொருட்களைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் உள்ள வரிச் சுமைகளை அமைச்சர் குறைத்துள்ளார். கடல் உணவு ஏற்றுமதிக்குத் தேவையான மூலப்பொருட்களை வரி இன்றி இறக்குமதி செய்வதற்கான வரம்பு, முந்தைய ஆண்டின் ஏற்றுமதி மதிப்பில் 1%-லிருந்து 3%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தோல் மற்றும் காலணி துறையில் காலணி தயாரிப்பில் 'ஷூ அப்பர்' தயாரிப்புக்கும் வரி விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்றுமதிக்கான கால அவகாசம் 6 மாதத்திலிருந்து 1 ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

4. கன்டெய்னர் தட்டுப்பாட்டைப் போக்க ரூ.10,000 கோடி

சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவாலான கப்பல் கன்டெய்னர் தட்டுப்பாட்டை போக்க புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் கன்டெய்னர் உற்பத்தியை அதிகரிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா கன்டெய்னர்களுக்காக 95% சீனாவையே நம்பியுள்ளது. செங்கடல் நெருக்கடி போன்ற காலங்களில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் இந்தியாவிலேயே கன்டெய்னர் உற்பத்தியை ஊக்குவிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள கூடுதல் வரிகளால் இந்திய ஏற்றுமதி கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சரிவைக் கண்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய நிறுவனங்களைக் காக்கவும், உலகளாவிய வர்த்தக மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியாவைத் தயார்படுத்தவும் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/explained/union-budget-2026-4-ways-in-which-it-addresses-us-tariffs-strain-on-india-11064424