/indian-express-tamil/media/media_files/2026/02/09/piyush-2026-02-09-20-29-26.jpg)
பியூஷ் கோயல் மீது உரிமை மீறல் தீர்மானம்... மாநிலங்களவை சபாநாயகருக்கு தி.மு.க எம்.பி. திருச்சி சிவா கடிதம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், கடந்த 3-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இறுதி நிலையில் உள்ளது; இது குறித்த முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த 7-ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகிவிட்டதாக அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் பல்வேறு ஊடகங்களுக்கும் இது தொடர்பாக நேர்காணல்களை அளித்தார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அரசின் கொள்கை முடிவுகளை அவைக்குத் தெரிவிக்காமல் வெளியே அறிவித்தது நாடாளுமன்ற உரிமை மீறல் என்று தி.மு.க எம்.பி. திருச்சி சிவா சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், அமைச்சர் பியூஷ் கோயல் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்து விசாரணை நடத்த வேண்டும். அவையை அவமதித்த வகையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்துச் சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணன் அளிக்கையில், வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஏற்கனவே நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அமைச்சர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இருப்பினும், திருச்சி சிவாவின் கடிதம் தொடர்பாக உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு அதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mp-tiruchi-siva-seeks-privilege-motion-against-union-minister-piyush-goyal-for-announcing-india-us-trade-deal-details-outside-parliament-11091485





