புதன், 11 பிப்ரவரி, 2026

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: உள்நாட்டு பால் உற்பத்தி பாதிப்பு - சேலத்தில் பி.ஆர். பாண்டியன் பேச்சு

 


WhatsApp Image 2026-02-10 at 10.23.07 PM

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: உள்நாட்டு உற்பத்தி பாதிப்பு - சேலத்தில் பி.ஆர். பாண்டியன் பேச்சு

இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் நோக்கம் கொண்ட மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தையும், அமெரிக்காவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற மகாசபை கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், இந்தியாவில் பால் மற்றும் உணவுப் பொருட்கள் சந்தைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு பால் உற்பத்தியையும், விவசாயிகளையும் அடியோடு அழித்துவிடும். இந்த ஒப்பந்தம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தி, உள்நாட்டு உற்பத்திக்கு பாதிப்பு இல்லாத வகையில் இறுதி செய்ய வேண்டும். விவசாயிகளிடமும் கருத்து கேட்க வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வழிவகுக்கும் மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை (MSP) கொண்டுவர வேண்டும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். மலைவாழ் மக்களுக்குச் சாலை, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும், சாகுபடி நிலங்களுக்குப் பட்டாவும் வழங்கப்படவில்லை. கள் உணவுப் பொருள் பட்டியலில் சேர்க்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டும், தமிழக அரசு காவல்துறை மூலம் வழக்குப் போட்டு அச்சுறுத்துகிறது. கள் விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் (அரசியல் சார்பற்றது) தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித்சிங் தல்லேவால் தலைமையில் குமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் யாத்திரை குழு, சேலத்தில் கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.பாபு தலைமையில் நடைபெற்ற மகாசபை கூட்டத்தில் கலந்து கொண்டது. இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

source https://tamil.indianexpress.com/tamilnadu/central-government-must-withdraw-electricity-amendment-act-farmer-leader-pr-pandian-11094978