நேற்றிரவு பாரீஸின் பல இடங்களிலும் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 167ஆக உயர்ந்துள்ளது.
இந்தப் பயங்கரவாதச் செயலைச் செய்தவர் எவர் என்பது இதுவரை உறுதியாக அறியப்படவில்லை. என்றாலும் தாக்குதல் நடைபெற்ற மிகச் சில நிமிடங்களுக்குள்ளாகவே, தாக்குதல் நடத்தியோர் முஸ்லிம்கள்தான்; அல்லாஹு அக்பர் என்று குரல் எழுப்பிக் கொண்டே துப்பாக்கிச் சூட்டை நடத்தினர் என்பது போன்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டன.
வழக்கம்போல உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் தாங்கள்பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலோர் சிரியாவிலும் இராக்கிலும் ஃப்ரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் இணைந்து நடத்தும் வான் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காதோர்தான்.
தவிர, பாலஸ்தீன் என்ற பெயரில் ஒரு நாட்டை அங்கீகரிக்க ஃபிரான்ஸ் அமைச்சரவை முடிவு செய்தபோது, இந்த முடிவு ஃப்ரான்ஸின் பெருந்தவறு என்றும் அதற்கு ஃபிரான்ஸ் பெரும் விலை கொடுக்க வேண்டி வரும் என்றும் வெளிப்படையாகவே எச்சரித்த இஸ்ரேல் பிரதமர் குறித்தெல்லாம் இப்போது கவலைப்பட வேண்டியதில்லை.
தாக்குதல் நடத்தியோர் அரபு வார்த்தைகளை மொழிந்தனர் என்பது மட்டுமே இந்தத் தாக்குதலை இஸ்லாமியப் பயங்கரவாதமாக மாற்றப் போதுமானது என்பதை தாக்குதலைத் திட்டமிட்ட பயங்கரவாதிகளும் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளும் தாக்குதலுக்குப் பின் முஸ்லிம்களைப் பொதுமைப்படுத்தும் பயங்கரவாதிகளும் நன்கறிந்துள்ளனர் என்பது மட்டும் உண்மை.
"கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்" என்றும், "ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.
குர்ஆன் 5:32
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
குர்ஆன் 5:8
