வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 லிருந்து 50 கிலோ மீட்டர் வரை வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒட்டபிடாரம், உத்திரமேரூர், மணியாச்சி ஆகிய இடங்களில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.