தூய்மை இந்தியா திட்டத்துக்கான கூடுதல் சேவை வரி அமலாவதால் ஏசி மற்றும் முதல் வகுப்பு ரயில் பயணக் கட்டணம் நாளை முதல் அதிகரிக்கிறது.
இதுதொடர்பாக, ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதல் சேவை வரி விதிப்பால் ஏசி மற்றும் முதல் வகுப்பு ரயில் பயணக் கட்டணம் 4.35 சதவிகிதம் உயரும் எனக் கூறப்பட்டுள்ளது. சேவை வரி 14 சதவிகிதத்துடன் தூய்மை இந்தியா திட்டத்துக்கான வரியாக அரை சதவிகிதம் விதிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த 9-ம் தேதி அறிவித்தது.
இது நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே, செல்ஃபோன் ரீசார்ஜ், முதல் வகுப்பு ரயில் பயணம் உள்ளிட்ட அனைத்து சேவைகள் மீதும் நாளை முதல் கட்டணம் உயர்கிறது. டெல்லியில் இருந்து சென்னைக்கு ஏசி மற்றும் முதல் வகுப்பு ரயில் கட்டணம் 102 ரூபாய் உயரும் எனத் தெரிய வந்துள்ளது.