(நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; “அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக.
நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.
ஆகவே (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார்.
சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; “துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்” என்று நாம் கூறினோம்.
(ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்: “எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.” பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.
ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.
பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.
அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.
(வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது; இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.
பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.
இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை;
அவர்கள் “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.
அதற்கவர்: “என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”என்றுகூறினார்.
“நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).
எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.
“இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.
இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்; பின்னர், ஸூர் (எக்காளம்) ஊதப்படும்; பிறகு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம்.
காஃபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை அவர்கள் முன் ஒரே பரபரப்பாக பரப்பி வைப்போம்.
அவர்கள் எத்தகையோர் (என்றால்) என் நினைவை விட்டும் அவர்களுடைய கண்களில் திரையிடப் பட்டிருந்தன; இன்னும் (நல்லுபதேசங்களைச்) செவிமடுக்கவும் அவர்கள் சக்தியற்றுப் போயினர்.
நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 18:83-102)
(அல்குர்ஆன் : 18:83-102)