சளி பிடிப்பது நம் எல்லாருக்கும் உள்ளதுதான். இது ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு போய்விடும். இதை சாதாரண சளி ( Common Cold ) என்போம். இது பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் உண்டாவது. இது காறறின் வழியாக நீர்த்துளிகள் மூலம் வெகு எளிதில் பரவும். அதனாலதான் சளி பிடித்துள்ள ஒருவரின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தாலும் உடன் தொற்றிக்கொள்ளுகிறது. சளி பிடித்துள்ள ஒருவர் தும்மினால் அல்லது இருமினால் வெளியேறும் நீர்த்துளிகளில் வைரஸ் கிருமிகள் இருக்கும் வாய்ப்பு உள்ளது. எதிரே உள்ளவருக்கு அது எளிதில் தோற்றும். இதனால்தான் நாம் இருமும்போதும் தும்மும்போதும் வாயை கைக்குட்டையால் மூடிக்கொள்ளவேண்டும். இது அடுத்தவருக்கு பரவாமல் இருக்கும் நோய்த் தடுப்பு நடவடிக்கை.
சில சமயங்களில் இதே சளி நீண்ட நாட்களாகத் தொடரும், மருந்துகள்கூட பயன்தராது. இதையே தொடர் மூக்கு அழற்சி என்கிறோம். இப்படி சளி தொடர்ந்து நீடிக்க சில காரணங்கள் இருக்கலாம். அவை வருமாறு :
* கிருமித் தொற்று – சைனஸ், டான்சில் போன்றவை இருப்பின் தொடர்ந்து மூக்கில் கிருமித் தொற்று இருந்துவரும். இதனால் அழற்சி உண்டாகி சளி அதிகம் சுரக்கும்.
* சுற்றுச் சூழல் மாசு - புகை, தூசு, சிகரட் புகை போன்றவற்றால் மூக்கினுள் நேரடியாக பாதிப்பு உண்டாவது. நகர்ப் புறங்களில் பெருகிவரும் வாகனங்களும், தொழிற்சாலைகளும் புகையை தொடர்ந்து வெளியேற்றி சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிப்பதோடு, பலருக்கு ஒவ்வாமையை உண்டுபண்ணி தொடர் மூக்கு அழற்சியை உண்டுபண்ணுகின்றன.
* மூக்கில் அடைப்பு – மூக்கின் நடுச்சுவர் விலகி ஒரு பக்கம் அடைப்பை உண்டு பண்ணும் அடைபட்ட பகுதியில் அழற்சி உண்டாகி சளி பெருகும்.
* மூக்கினுள் இரத்த ஓட்டத்தில் மாற்றம் – இரத்த ஓட்டம் அதிகரித்தால் சளி சுரப்பிகளும் அதிகம் செயல்படும். சளி சுரப்பதும் அதிகமாகும்.
* தைராய்டு சுரப்பி கோளாறு.- இந்த சுரப்பி சரியாக இயங்கவில்லையெனில் அழற்சி ஏற்படும்.
இவையெல்லாம் மூக்கில் சளி தொடர்ந்து நீடிக்கச் செய்யும் சில காரணங்கள்.
இதுபோன்ற காரணங்களால் மூக்கில் அழற்சி உண்டானால் அதனுள் சில மாற்றங்கள் உண்டாகின்றன. அங்கு சளியைச் சுரக்கும் சுரப்பிகள் வீக்கமுற்று சளி உற்பத்தியை அதிகமாக்குகின்றன . அந்தப் பகுதியில் இரத்த ஓட்டமும் அதிகமாகி சிவந்து போகிறது.
சளி பிடிப்பது முக்கியமான அறிகுறியானாலும், மூக்கினுள் வேறு சில மாற்றங்களும் தோன்றுகின்றன. அவை வருமாறு:
* மூக்கு அடைப்பு – படுத்திருந்தால் இது அதிகமாகும்.
* மூக்கில் அதிக சளி சுரப்பது – இது தொண்டைக்குள்ளும் புகுந்து சிரமத்தை உண்டு பண்ணும்.இதனால் அடிக்கடி காரி துப்புவார்கள்.
* தலைவலி – மூக்கின் நடுச் சுவர் வீக்கமுற்றதல் தலைவலி உண்டாகும்.
* மூக்கின் சுருள் எலும்புகள் வீக்கம் – இந்த சுருள் எலும்புகள் மூக்கின் இருபுறமும் மூன்று விதமாக அமைந்திருக்கும். இவை வீக்கமுற்று வலியை உண்டுபண்ணும். சிகிச்சை
சாதாரன குறுகிய கால சளி இரண்டொரு நாட்களில் தானாகக்கூட சரியாகிவிடும். ஆனால் இதுபோன்ற தொடர் மூக்கு அழற்சியால் உண்டாகும் சளியை சிகிச்சை மூலமே சரிப்படுத்த முடியும். அவை வருமாறு:
* காரணத்தைக் கண்டறிந்து அதற்கு நிவாரணம் காணுதல்- உதாரணமாக சைனஸ், டான்சில், ஒவ்வாமை, புகைத்தல், மது போன்றவற்றுக்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்ளுதல். சுற்றுச் சூழலை சரி செய்தல் அல்லது தவிர்த்தல்.
* மூக்கை சுத்தம் செய்தல் – மூக்கினுள் உள்ள சுரப்பு நீரையும் கிருமித் தொற்றையும் கழுவும் மருந்துகள் பயன்படுத்துதல்.
* மூக்கு அடைப்பை சரி செய்யும் சொட்டு மருந்துகள் பயன்படுத்துதல்.
* கிருமிகளுக்கு ஏற்ப எண்டிபையாட்டிக் மருந்துகள் உட்கொள்ளுதல்.